'நாங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறோம்!' -போராட்டத்தில் குதித்த கரும்பு விவசாயிகள் | Sugarcane farmers protest in tanjore

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (29/12/2018)

கடைசி தொடர்பு:22:30 (29/12/2018)

'நாங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறோம்!' -போராட்டத்தில் குதித்த கரும்பு விவசாயிகள்

தஞ்சாவூர்  அருகே உள்ள குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நடப்பு  ஆண்டிற்கான கரும்பு  அறவையை காலதாமதமாக தொடங்கியதை  கண்டித்தும்,அடிக்கடி  அறவை மிஷின் பழுதடைந்துவிடுவதால் வெட்டப்பட்ட கரும்புகள் டன் கணக்கில் ஆலையின் முன்பு டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் தேங்கி நிற்கின்ற அவல நிலை ஏற்படுகிறது.இதனால் கரும்பு விவசாயிகள் பலவகையில் இன்னல்களுக்கு ஆளாவதாக கூறி டிராக்டர்களை சாலையின்  குறுக்கே போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள்

தஞ்சை புதுக்கோட்டை சாலையில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் கரும்பு அறவை அக்டோபர் மாதம் தொடங்கும்.கடந்த சில ஆண்டுகளாக அறவை நவம்பர் மாத  இறுதியில் காலதாமதமாக தொடங்குவது  வாடிக்கையாக இருந்தது.இந்த ஆண்டு அறவை டிசம்பர் மாதம் 25ம் தேதி மிகவும் காலதாமதமாக தொடங்கினர். இதனால் சர்க்கரை கட்டுமான திறன் குறைவதுடன், ஆலையில் கரும்பு பதிவு குறைந்து விலை வீழ்ச்சி  ஏற்படுகிறது  என கூறி அறிஞர் அண்ணா கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் ராமநாதன் தலைமையில்  சுமார் 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் தஞ்சை புதுக்கோட்டை சாலையில் கரும்புகளுடன்  டிராக்டர்களை குறுக்கே போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாயிகள் சமாதானம் அடையாமல் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் குருங்குளம் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ஜனனி சௌந்தர்யா சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  

போராட்டம்

இது குறித்து அறிஞர் அண்ணா கரும்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் கோவிந்தராஜ் கூறியதாவது,குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் அறவை அக்டோபர் மாதம் தொடங்கும். காலப்போக்கில் இது நவம்பர் மாதமாக மாறியது. இந்த ஆண்டு அறவை பருவம் தொடங்காமல் இருந்தது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட போது டிசம்பர்  5ம் தேதி தொடங்கப்படும் என்றனர். ஆனால் அறவை தொடங்குவதற்குள்  கஜா புயல் அடிக்க அதை  காரணம் காட்டி கடந்த 25ம் தேதி தான் அறவையை தொடங்கினர். இதுவரை 8 நாட்கள் தான் அறவை நடந்துள்ளது. இதில் வெறும் 50 டன் மட்டுமே அறவை செய்யப்பட்டுள்ளது.இதற்கு காரணம் இந்த ஆலை தொடங்கி 44 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் இந்த ஆலையில் உள்ள பழமையான மிஷின்கள் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று தெரிவித்து புதிய மிஷின்கள் மாற்றப்பட்டது.ஆனால் அடிக்கடி மிஷின் பழுதடைந்துவிடுகிறது. 


இவ்வாறு மிஷின் பழுதடைவதால் கரும்பு வெட்டப்பட்டு டன் கணக்கில் ஆலையின் முன்பு டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் கரும்பு தேங்கி நிற்கிறது.இதனால் கரும்பு வெட்ட முடியவில்லை.காலதாமதமாக கரும்பு வெட்டுவதால் கரும்பு பிழிதிறன் குறைந்துவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆலையில் கரும்பு பதிவு குறைந்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் கரும்பை வெட்டி அறைத்தால் தான் அதிலிருந்து கிடைக்கும் பணத்தை கொண்டு கரும்பு விவசாயிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியும். அதே போல் வெளியூர்களில் இருந்து ஏராளமான தொழிலாளிகள் கரும்பு வெட்ட வந்துள்ளனர். டன் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு ரூ.600 கூலியும், படிகாசாக ரூ.25ம், அரிசியும் கொடுக்க வேண்டும். கரும்பு வெட்டினாலும், வெட்டாவிட்டாலும் கரும்பு வெட்ட வந்துள்ள தொழிலாளிகளுக்கு இதை கொடுக்கவில்லை என்றால் வேலையை தேடி வேறு  இடத்திற்கு சென்று விடுவார்கள்.ஏற்கனவே அரசு கரும்பு விவசாயிகளுக்கு போதுமான ஊக்கத்தொகை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதால் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறோம். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் கரும்பு அறவையை தொடங்குவதோடு விரைவு படுத்த வேண்டும் என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க