வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (29/12/2018)

முதுகுளத்தூர் தி.மு.க -வினர் இடையே கோஷ்டி மோதல் - முன்னாள் அமைச்சர் ஆவேசம்

 முதுகுளத்தூரில் நடந்த தி.மு.க ஆலோசனைக் கூட்டத்தில் மோதிக்கொண்ட கட்சியினரை கட்டுப்படுத்த ''மைக்கினால் மண்டையை உடைப்பேன்'' என முன்னாள் அமைச்சர் பெரியசாமி ஆவேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற தொகுதி வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் இந்த கூட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் ராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனுக்கு  திருவாடானை  கூட்டத்தில் பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் தற்போதைய மாவட்ட பொறுப்பாளரான முத்துராமலிங்கம் மீது வெறுப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுப.தங்கவேலனின் ஆதரவாளரான முதுகுளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தரப்பினருக்கும், மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் கைகளாலும், நாற்காலிகளாலும் தாக்கி கொண்டனர். 
 
இதனை மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் பெரியசாமி சமாதானம் செய்ய முயன்றும் மோதல் நீடித்தது. இதனால் ஆவேசம் அடைந்த அவர், ''கூட்டத்தில் பிரச்னை செய்யாதீர்கள். அமைதியாக இருங்கள். நான் சொல்வதை கேட்காவிடில் மைக்கினால் மண்டையை உடைத்து விடுவேன்'' என எச்சரிக்கை செய்தார். இதையடுத்து கட்சியின் நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைந்து போகச் செய்தனர். 
 

இதன் பின் அமைதியாக நடந்த கூட்டத்தில்  பேசிய ஐ.பெரியசாமி, ''முதுகுளத்தூர் தொகுதி தி.மு.க-வுக்கு சாதகமான தொகுதி. இங்கு கட்சியினர் தங்களுக்கு இடையே மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியின் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு அதிக வாக்குகளைப் பெறுவதற்கான பணிகளில் ஈடுபடுங்கள் என்றார்.