``எந்த சத்துணவு மையங்களையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை!" - அமைச்சர் சரோஜா | No plans to close nutrition centres , says minister Saroja

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (29/12/2018)

கடைசி தொடர்பு:09:30 (31/12/2018)

``எந்த சத்துணவு மையங்களையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை!" - அமைச்சர் சரோஜா

தமிழகத்தில் 2,383 அங்கன்வாடி மையங்கள், நடுநிலைப் பள்ளிகளோடு இணைந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 54,449 அங்கன்வாடி மையங்களும், 4,449 குறு அங்கன்வாடி மையங்களும் உள்ளன.

``எந்த சத்துணவு மையங்களையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை!

"எந்தவொரு சத்துணவு அல்லது அங்கன்வாடி மையங்களையும் மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை" என்று சமூக நலத் துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்

.அமைச்சர் சரோஜா

தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் சரோஜா நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆங்கில வழிக் கல்வி, நிகழாண்டில் அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டுவரும் திட்டத்தைப்  பள்ளிக்கல்வித் துறையும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டமும் இணைந்து  செயல்படுத்த உள்ளன. அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு நடுநிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் ஆங்கிலம் கற்றுக் கொடுப்பார்கள்.

தமிழகத்தில் 2,383 அங்கன்வாடி மையங்கள், நடுநிலைப் பள்ளிகளோடு இணைந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 54,449 அங்கன்வாடி மையங்களும், 4,449 குறு அங்கன்வாடி மையங்களும் உள்ளன. இந்த மையங்களில் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.  இந்தத் திட்டத்துக்காக ரூ.2,519 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு சத்துணவு அல்லது அங்கன்வாடி மையங்களையும்  மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. அதே சமயத்தில், குழந்தைகளின் எண்ணிக்கை 25-க்கும் குறைவாக உள்ள சத்துணவு, அங்கன்வாடி மையங்களுக்கு, அருகில் உள்ள மையத்தில் இருந்து உணவு எடுத்துவந்து வழங்கப்படவுள்ளது. இதனால் பணியில் உள்ள சத்துணவு,  அங்கன்வாடி மையப் பணியாளர்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. 
 பள்ளிக்கல்வித் துறை மூலம் ரூ.6 கோடியும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் ரூ.1.50 கோடியும் என மொத்தம் ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு பரிட்சார்த்த முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுவதுபோல், இந்த அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கும் சீருடை, புத்தகம், புத்தகப் பை உள்ளிட்ட உபகரணங்கள் பள்ளிக்கல்வித் துறை மூலம் வழங்கப்படும். உணவு, குடிநீர், கொசுவலை உள்ளிட்டவை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும். 

சமூகநலத் துறையில் பல்வேறு நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவை ஏற்படும் பட்சத்தில் நாமக்கல் மாவட்டத்தில் சத்துணவு  அங்கன்வாடி மையங்களில் உள்ள 1,000  காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்" என்றார்.

அதற்கு முன்னதாக 'வேளாண் கண்காட்சியில்' பேசிய அமைச்சர் சரோஜா, "விவசாயம் என்பது பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்று கற்றுக்கொள்வது அல்ல... அது வீட்டிலேயே காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உற்பத்திசெய்து பழகும் வகையில் குழந்தைகளை வளர்க்க வேண்டும். மேலும், எத்தகைய மண்வளத்தில் பயிரிட முடியும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். வேளாண் உற்பத்தியைப் பெருக்கிக்கொள்ளும் வகையில், 2018-19-ம் ஆண்டில் வேளாண்மைத் துறைக்கு ரூ.8,919 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தை மறைந்த முன்னள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார்.

அந்த வகையில் வேளாண் துறையோடு, கால்நடைத் துறையும் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டதனால், கிரிஷிக்கர்மா விருதினை தமிழ்நாடு வேளாண்மைத் துறை 4-வது முறையாகப் பெற்றுள்ளது. சின்னசேலம் கூட்டு ரோடு பகுதியில் 800 ஏக்கர் பரப்பில் உலகத்தரம் வாய்ந்த கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இதன்மூலம் வெளிநாடுகளில் உள்ளதுபோல அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படவுள்ளது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்