தேனியில் நிலக்கடலை நடவு ஆரம்பம் - மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள் | Ground nut Farming started in Theni

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (29/12/2018)

கடைசி தொடர்பு:23:30 (29/12/2018)

தேனியில் நிலக்கடலை நடவு ஆரம்பம் - மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயிகள்

பெரியகுளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை நடவுப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

நடவுப்பணி

பொதுவாக மானாவாரி விவசாய பகுதிகள் அதிக அளவில் நிலக்கடலை நடவு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், தேனி மாவட்டத்தில் பரவலாக, பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, எண்டபுளி, சில்வார் பட்டி, ஜெயமங்கலம் உட்பட பகுதிகளில் நிலக்கடலை நடவுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. நிலத்தைப் பண்படுத்தி, உரங்கள் இட்டு, விதை நடுவதற்கு ஏற்றார் போல பார் அமைத்து கடலை நடவு செய்துவருகின்றனர் விவசாயிகள். பருவமழையை மட்டுமே நம்பி பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபட்டிருந்தாலும், இப்பகுதியில், கிணற்றுப் பாசனத்திலும் சிலர் நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர்.

நிலக்கடலை

தற்போது கே 9, கே 6, தரணி உள்ளிட்ட நிலக்கடலை விதைகள் இந்த பகுதியில் பரவலாக  விதைக்கப்படுகின்றனர்   அதிலும் கே .6, ரக நிலக்கடலை விதைகள் அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மார்கழி மாதம் விதைக்கப்படும் நிலக்கடலை மாசி அல்லது பங்குனி மாதங்களில் விளைச்சலுக்கு தயாராகிவிடும். அதாவது 110 முதல் 120 நாள்களில் முழு விளைச்சலை நிலக்கடலை அடைந்துவிடும். ”கடந்த முறை போதிய மழை இருந்ததால் நல்ல விளைச்சலால் முழு லாபம் அடைந்தோம். அதே போல இந்த ஆண்டும் மழையை எதிர்பார்த்து நிலக்கடலை நடவு செய்திருக்கிறோம்”என்றனர் விவசாயிகள்.