மேகமலையில் வைரக்கல் தேடிய ஆறு பேர்! - அதிரடி காட்டிய வனத்துறை | Six people arrested for diamonds in forest - Forest Action.

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:02:00 (30/12/2018)

மேகமலையில் வைரக்கல் தேடிய ஆறு பேர்! - அதிரடி காட்டிய வனத்துறை

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வைரக்கல் தேடியதாக கிடைத்த ரகசியத்தகவலில் படி அதிரடி சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர் ஆறு பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட வருசநாடு ரேஞ்ச், மஞ்சனூத்து தெற்குச் சரகம், உப்புக்கொண்டான் பாறை எனும் இடத்தில் மர்ம நபர்கள் சிலர் வைரக் கல் தேடுவதாக மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவரின் வழிகாட்டுதலின் பேரில், ரேஞ்சர் இக்பால் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதி இல்லாமல், வனத்திற்குள் முகாமிட்டிருந்த ஆறு பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், வைரக்கல் தேடிவந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்தது ரேஞ்சர் இக்பால் தலைமையிலான குழு.

இது தொடர்பாக மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதியிடம் கேட்ட போது, “வைரக்கல் எடுக்க காட்டிற்குள் சிலர் செல்கிறார்கள் என ரகசியமாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனே ரேஞ்சர் இக்பால் தலைமையிலான குழுவைச் சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். அங்கே ஆறு பேர், நிலத்தை இரண்டு அடிக்கு தோண்டி, வெள்ளைக் கற்களை எடுத்து சேகரித்து வைத்திருந்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நகைகளுக்குப் பயன்படுத்துவதற்காக சாதாரண வெள்ளை நிறக்கற்களை மண்ணைத் தோண்டி எடுத்து அதனை ஏஜெண்ட் ஒருவரிடம் விற்பனை செய்ய இருந்தது தெரிவந்தது.

அதனை அவர்கள் வைரக்கல் என்கிறார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆறு பேரை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். ஒருலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த கற்களை யார் வாங்குகிறார்கள். அதனால் அவர்களுக்கு என்ன பயன் என விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்.” என்றார். எதற்குமே பயன்படாத அந்த வெள்ளை நிறக்கல்லை, வனத்திற்குள் வைரக்கல் இருக்கிறது எனக் கூறி மோசடியில் ஈடுபட்டு இப்பகுதி மக்களை யாரேனும் ஏமாற்றுகிறார்களா? என மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்பதே அப்பகுதி சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.