சிவகங்கையில் உள்ளாட்சி துறை அலுவலகங்களில் தமிழக தேர்தல் ஆணையர் ஆய்வு! | state election commissioner inspection in sivagangai

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:04:00 (30/12/2018)

சிவகங்கையில் உள்ளாட்சி துறை அலுவலகங்களில் தமிழக தேர்தல் ஆணையர் ஆய்வு!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  உள்ளாட்சித் துறையின் மூலம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் முன்னிலையில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் புரோஷ்கான்  ஆய்வு செய்தார்.

ஆய்வு

இந்த ஆய்வின்போது மாநில தேர்தல் ஆணையர், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்ததுடன், வாக்குச் சாவடி மையம் சீரமைப்பு மற்றும் புதிய வாக்காளர் சேர்க்கை ஆகியவற்றைச் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என உறுதி செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். அதேபோல் நகராட்சிகளிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக உள்ளதா எனக் கண்காணித்து பராமரித்திட வேண்டும்.  மேலும் பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் வாக்குச்சிட்டு பெட்டிகள் போதிய அளவு உள்ளதா எனக் கண்டறிவதுடன் தேவைப்படும் பகுதிகளுக்கு முன்கூட்டியே தேவையான வாக்குச்சிட்டு பெட்டிகள் பெற்று தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பதிவேடுகள் மற்றும் உபகரணங்கள் தேவையான அளவிற்கு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் வாக்குச்சிட்டு பெட்டிகளையும் அதேபோல் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் பார்வையிட்டு சரியாக பராமரித்துக் கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து மானாமதுரை, திருப்புவனம் ஆகியப் பகுதிகளுக்கு சென்று பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைப் பார்வையிட்டார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க