வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:08:00 (30/12/2018)

`தமிழக சுகாதாரத்துறையின் மெத்தனப் போக்கினை ஏற்றுக்கொள்ள முடியாது!’ - கனிமொழி

``எய்ட்ஸ் பற்றிய  போதிய விழிப்புஉணர்வு உள்ள போதிலும் மனித உயிர்கள் மீது தமிழக சுகாதாரத்துறை அக்கறை  இல்லாமல்  செயல்பட்டுள்ளது வேதனைக்குரியது. இதில் அரசின்  மெத்தனப்போக்கினை   ஏற்றுக்கொள்ள முடியாது" என திமுக மாநிலங்களவை எம்.பி., கனிமொழி தெரிவித்துள்ளார்.

கனிமொழி

நெல்லையில் நடைபெற்று வரும் பெரியார் 140 ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காகத் திமுக மகளிரணி மாநில செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "தமிழகத்தில் சுகாதாரத்துறை எந்த அளவுக்கு மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் திமுக தலைவர் ஸ்டாலின் பல இடங்களில் உதாரணத்தோடு சுட்டிக்காட்டி உள்ளார்.

இதுபோன்று உறுப்பு மாற்று சிகிச்சை, குட்கா ஊழல் மற்ற துறைகளில் அரசு செயலர்கள் மற்றும் ஊழல்களைத் திமுக  தகுந்த நேரத்தில் எடுத்துக்காட்டியுள்ளது.  எய்ட்ஸ் பற்றிய  போதிய விழிப்புஉணர்வு உள்ள போதிலும் மனித உயிர்கள் மீது சுகாதாரத்துறை அக்கறை  இல்லாமல் செயல்பட்டுள்ளது வேதனைக்குரியது. இதில் இதுவரை 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்தபிறகும் அரசு  மெத்தனமாகச் செயல்படுகிறது. அரசின் இந்த மெத்தனப் போக்கினை  ஏற்றுக்கொள்ள முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடுவது என்பது தலைமைக் கழகத்தின் முடிவைப் பொறுத்தே உள்ளது. திமுக சார்பாக மாவட்டம் வாரியாக நடைபெறும் கிராம ஊராட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க.,வில் பலரும் பல்வேறு இடங்களுக்குச் செல்லுமாறு திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது. 

நாங்களும் அதன்படியே செயல்படுகிறோம். அதே போலத்தான் தூத்துக்குடியில் கிராம ஊராட்சி கூட்டங்களில் நானும் கலந்து கொள்ள உள்ளேன். இதற்காகத் தூத்துக்குடிக்கு நான் வருவதால் இங்கு போட்டியிடப் போகிறேன் என்று அர்த்தமல்ல" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க