``இரண்டு ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்!” -இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை | ISRO head sivan press meet in kanniyakumari district

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:07:30 (30/12/2018)

``இரண்டு ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவோம்!” -இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை

ரண்டு ஆண்டுகளில் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதன்மூலம் அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சிவன்

நாகர்கோவிலை அடுத்துள்ள சரக்கல்விளையில் நேற்று இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "2022-ம் ஆண்டிற்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சி முழுவீச்சில் நடந்து வருகிறது. முதலில் பரிசோதனை முயற்சியாக இரண்டுமுறை ஆளில்லா விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்படும். அதைத் தொடர்ந்து 3 பேரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் உள்ளது.

இஸ்ரோ தலைவர்

முதலில் ஒரு வீரர் தேர்வு செய்யப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளார். 2022-ம் ஆண்டிற்குள் மனிதனை அனுப்ப வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் விரைவாக, இரண்டு ஆண்டுகளில் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விமானப்படையைச் சேர்ந்த வீரரை முதலில் அனுப்பவுள்ளோம். அவருக்கு விண்வெளியில் தங்கியிருப்பதற்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒரு வருடம் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இஸ்ரோ தலைவர்

ககன்யான் திட்டத்தை வெற்றி பெறவைக்கும் முழு முயற்சியில் இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா வரிசையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடு என்ற பெருமை இந்தியாவிற்குக் கிடைக்கும்" என்றார்.