வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:10:09 (31/12/2018)

``அறுவடை செய்யவில்லை... மயில்களுக்காவது உணவாகட்டும்!” -விரக்தியில் புதுக்கோட்டை விவசாயிகள்

கஜா புயல் பாதிப்புக்கு பிறகு 45 நாட்கள் ஆகியும் இன்னும் சில விவசாய நிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படாததால், விவசாயிகளின் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இந்த நிலையில் தான் விளைந்து இருக்கிற பயிர்களை அறுவடை செய்யாமல் மயில்கள் திண்ணுட்டு போகட்டும் என விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை அருகே கம்மங்காடு பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவிற்கு நெல் சாகுபடி நடக்கிறது. கஜா புயலுக்கு பிறகு மின்கம்பங்கள் அனைத்தும் ஒடிந்து விழுந்தது. விவசாய பயிர்களுக்கு இடையே அமைக்கப்பட்ட மின்கம்பங்கள் நடவுப் பயிர்களுக்குள்ளே சரிந்து கிடக்கிறது. இதனால், விவசாய நிலங்களுக்குச் செல்லும் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. 45 நாட்கள் ஆகியும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்காததால், இங்குள்ள பயிர்கள் கருகி வருகின்றன. புயலுக்குப் பிறகு பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிரை அறுவடை செய்யாமல் விவசாயிகள் போட்டு வைத்துள்ளனர்.

பயிர்


இதுகுறித்து இந்த பகுதி விவசாயிகள் பேசுகையில், "புயலுக்கு முன்னாலேயே நடவு பண்ணிட்டோம். இப்படி எல்லாம் புயல் அடிக்கும்ணு தெரிந்து இருந்தா, நடவு தாமதமாக பண்ணி இருப்போம். 120 நாளில் வரக்கூடிய பயிருக்கு 50 நாள் வரையிலும் தண்ணீர் இல்லையின்னா கருகித்தானே போகும். மின்வாரிய அதிகாரிகளிடம் இதனைச் சொல்லி புலம்பி விட்டோம். ஆனாலும் மின்சாரம் வந்த பாடு இல்லை. ரெங்கசாமி என்பவருக்குப் போன வாரம் அறுவடை. ஆனால், அவர் அறுவடை எல்லாம் செய்யவில்லை. அறுவடை செஞ்சாலும், அறுவடைக்கான செலவைக் கூட எடுக்க முடியாது.

பயிர்

இப்ப சில தினங்களுக்கு முன்னால இரண்டு ஏக்கர் பரப்பு 57 ரகம் அறுவடை செஞ்சோம். 40 ஆயிரம் வரையிலும் இதற்குச் செலவு செஞ்சோம். 70 முதல் 80 மூட்டை நெல் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கிடைத்ததோ 23 மூட்டை நெல் தான். அறுவடை காசுக்குக் கூட அது வரலை. எனவே தான் விளைந்து இருக்கிற கொஞ்ச நஞ்ச பயிரை மயிலாவது கொத்தி திண்ணுட்டு போகட்டும் என்று விட்டுவிட்டோம். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நெல்மணிகள் செழிப்பாக வளர்ந்து இருப்பது போல தெரியும். பக்கத்தில் வந்து பார்த்தா வெறும் பதராக இருக்கும். அரசு எங்களுக்கு பயிர்களைப் பார்த்து முறையான இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.