``பணம் கொடுத்தால், வேலூர் சி.எம்.சி யில் வேலை!” -ரூ 14 லட்சம் மோசடி செய்த நபர் கைது | Man was arrested in fraud case in vellore

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:07:00 (30/12/2018)

``பணம் கொடுத்தால், வேலூர் சி.எம்.சி யில் வேலை!” -ரூ 14 லட்சம் மோசடி செய்த நபர் கைது

வேலூர் சி.எம்.சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 8 பேரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்த வாலிபரைப் பிடித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் சி.எம்.சி

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த பூண்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (23). இவருக்கு, வேலூர் அடுத்த மேல்மொணவூர் ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த உதயகுமார் (24) என்பவர் அறிமுகமானார். இவர், பிரபல சி.எம்.சி மருத்துவமனையில் பணிபுரிவதாக தெரிவித்தார். ‘பணம் கொடுப்பவர்களுக்கு சி.எம்.சி மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகவும்’ கார்த்திகேயனிடம் நம்பிக்கை அளிக்கும் விதமாகக் கூறினார் உதயகுமார். 

இதுபற்றி கார்த்திகேயன், தன்னுடைய நண்பர்களிடம் தெரிவித்தார். அவர்களும் வேலையில்லாமல் இருந்ததால், சி.எம்.சியில் வேலை செய்ய ஆசைப்பட்டனர். கார்த்திகேயனுடன் சேர்ந்து மொத்தம் 8 பேர், ரூ.14 லட்சத்தை உதயகுமாரிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட உதயகுமார் வேலை வாங்கித் தராமல் இழுத்தடித்தார். பணம் கொடுத்த 8 இளைஞர்களும் ‘எப்போது வேலைக் கிடைக்கும்’ என்று கேட்டு நச்சரித்தனர்.

அப்போது உடனடியாக, இரண்டு இளைஞர்களுக்கு வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்தார் உதயகுமார். அந்த இளைஞர்கள், அப்பாயின்மென்ட் ஆர்டருடன் வேலையில் சேர சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவமனை நிர்வாகத்தினர், ஆர்டரை வாங்கிப் பார்த்துவிட்டு.. ‘இது போலியாக தயாரிக்கப்பட்டவை. உதயகுமார் என்பவர் சி.எம்.சி ஊழியரே இல்லை’ என்று தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.
 

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, சி.எம்.சி பெயரில் ரூ.14 லட்சம் மோசடி செய்த உதயகுமாரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.