வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:03:30 (30/12/2018)

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட இடைநிலை ஆசிரியர்கள்!

ம வேலைக்கு, சம ஊதியம்”  வேண்டும் என்ற கோரிக்கைகளோடு கடந்த  24-ம் தேதி முதல்  தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில்  ஈடுபட்டுவந்த இடைநிலை ஆசியர்கள் ஆறாவது நாளான 29 -ம் தேதி போராட்டத்தை  வாபஸ் பெற்றுள்ளனர்.

ஆசிரியர் போராட்டம்

2009 ஜூன் மாதத்திற்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கும் அதற்கு முன்னாள் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்கும் இடையே 15,000 ரூபாய்க்கும் அதிகமாக ஊதிய முரண்பாடுகள் இருப்பதாகப் பல ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 24-ம் தேதி இந்த பிரச்னைக்கான தீர்வுகாண முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சொல்லியிருந்த நிலையில், முதல்வர் சந்திக்க வராததால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினர்.

முதலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி ராஜரத்தினம் அரங்கத்தில் அடைத்தனர். பின்னர் அங்கு போதிய இட வசதிகள் இல்லாத காரணத்தால் மீண்டும் தொடக்க கல்வி அலுவலகத்திற்கு இடம் மாற்றப்பட்டது .

போராட்டம்

கடந்த ஆறு நாட்களில் 200 -க்கும்   மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்படப் பல அரசியல் தலைவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஒரு நபர் குழுவின் அறிக்கை தக்கல் செய்த பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கப் படும் என, பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை பிரதீப் யாதவ்  எழுத்துப்பூர்வ வாக்குறுதியை ஏற்று இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர்.