வெளியிடப்பட்ட நேரம்: 08:54 (30/12/2018)

கடைசி தொடர்பு:08:54 (30/12/2018)

17 நாள்கள்... 12 லட்சம் தலைப்புகள்...1.5 கோடி புத்தகங்கள்... சென்னை புத்தகக் கண்காட்சி அப்டேட்!

"புதிய நூல்கள், நூல்கள் குறித்த குறிப்புகள், அரங்கு எண் ஆகியவை அறிந்துகொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாசகர்களுக்கென இலவச வைஃபை வசதி, சார்ஜர் வசதி, உணவகம், குடிநீர், ஏடிஎம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன."

புத்தாண்டு என்றதும் புத்தகப் பிரியர்களுக்கு ஞாபகம் வருவது சென்னை புத்தகத் திருவிழாதான். தமிழகத்தின் பல பகுதிகளிலும் புத்தகக் காட்சிகள் நடைபெறுகின்றன என்றாலும், எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் சென்னை புத்தகக்காட்சியை மையமிட்டுத்தான் புதிய படைப்புகளை வெளியிடுவார்கள். இந்த ஆண்டு வாசகர்கள் பிரமாண்டமாகக் கொண்டாடக் காத்திருக்கும் 42-வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 4-ம் தேதி தொடங்கி ஜனவரி 20-ம் தேதி வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வி மைதானத்தில் நடைபெறவுள்ளது.  820 அரங்குகள், 1.5 கோடி புத்தகங்கள், பல லட்சம் வாசகர்கள் எனக் களைக்கட்டப்போகும் புத்தகக்காட்சியை,  தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கிவைக்க உள்ளார்.  

சென்னை புத்தகத் திருவிழா

``புத்தக வாசிப்பு அதிகமாயிருக்கும் நேரத்தில் வாசகர்கள் ஆவலோடு இந்தப் புத்தகக் காட்சியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு 13-லிருந்து 14 நாள்கள் மட்டுமே நடைபெற்று வந்த இந்தக் காட்சியை, இந்தமுறை 17 நாள்களாக மாற்றியுள்ளோம். இதற்கு முக்கியக் காரணம், வாசகர்களிடமிருந்து கடந்த ஆண்டுகளில் கிடைத்த வரவேற்புதான். தமிழுக்கு 487, ஆங்கிலத்துக்கு 294, மல்டிமீடியாவுக்கு 13, பொது அரங்குக்கு 26 என, மொத்தம் 820 அரங்குகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

இலக்கியம், இசை, உடல், உணவு, சினிமா என 12 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் சுமார் 1.5 கோடி புத்தகங்கள் இந்தக் காட்சியில் இடம்பெற உள்ளன. முன்னாள் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் தங்கர்பச்சான், ஆட்சியர் வெ.இறையன்பு, எழுத்தாளர் நாஞ்சில்நாடன் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.  

சென்னை புத்தகத் திருவிழா

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, இளம் குறும்பட, ஆவணப்பட இயக்குநர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் படங்களைத் திரையிட புத்தகக் காட்சி வளாகத்தில் தனி அரங்குகள்... எனப் பல நிகழ்ச்சிகள் இந்தப் புத்தகக் காட்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாசகர்கள் எழுத்தாளர்களை சந்தித்துப் பேசவும் தனி அரங்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காட்சி நடைபெறும் அனைத்து நாளிலும் தலைசிறந்த ஆளுமைகள், விருதுபெற்ற எழுத்தாளர்கள், திரைத்துறைப் பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் வாசகர்களைச் சந்தித்து உரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புத்தகக் காட்சியில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு முதல்முறையாகச் சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது, முதல் பெண் பதிப்பாளருக்கான விருது, சிறந்த பெண் படைப்பாளர்களுக்கான விருது ஆகியவற்றையும் வழங்கவுள்ளோம். 

முதல்முறையாக ஆன்லைன் டிக்கெட் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நூல்கள், நூல்கள் குறித்த குறிப்புகள், அரங்கு எண் ஆகியவை அறிந்துகொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாசகர்களுக்கென இலவச வைஃபை வசதி, சார்ஜர் வசதி, உணவகம், குடிநீர், ஏடிஎம் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன" என்றார் பபாசியின் தலைவர் வயிரவன்.

சென்னை புத்தகத் திருவிழா

விகடன் பிரசுரம், இந்த ஆண்டு `வேள்பாரி' என்ற மிகச் சிறந்த நாவலோடு இந்தப் புத்தகக் காட்சியில் கலந்துகொள்ள உள்ளது. சு.வெங்கடேசனின் எழுத்திலும் மணியம் செல்வத்தின் ஓவியத்திலும் ஆனந்த விகடனில் வெளிவந்த இரண்டு ஆண்டுகளும் வாசகர்களால் கொண்டாடப்பட்டது வேள்பாரி தொடர். இது புத்தகமாக டிசம்பர் 29-ம் தேதி சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நாவல் புத்தகக் கண்காட்சியில் விகடன் பிரசுரம் அரங்குகளில் கிடைக்கும்.


டிரெண்டிங் @ விகடன்