வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (30/12/2018)

`பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் மாணவனுக்கு லேப்டாப்; மாணவிக்கு சைக்கிள்!’ - கரூர் இளைஞர்களின் அசத்தல் முயற்சி

கரூர் நண்பர் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் 

கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 147 பள்ளிகளில் படிப்பவர்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவருக்கு லேப்டாப்பும்,மாணவிக்கு சைக்கிளும் பரிசாக வழங்க இருப்பதாக கூறி பிளாஸ்டிக் ஒழிப்பில் புதுமுயற்சியை எடுத்திருக்கிறார்கள் கரூர் இளைஞர்கள்.

கரூர் நண்பர் குழு தயார் செய்திருக்கும் செய்தித்தாளான பை

 இன்று உலகம் முழுக்க நீக்கமற பரவி இருக்கும் ஒருபொருள் என்றால், அது பிளாஸ்டிக்குகள்தான். நிலம், சாக்கடை குழாய், கடல், மலைபிரதேசங்கள் என்று எந்த இடத்தையும் விட்டுவைக்காமல், மனிதர்களாகிய நாம் பிளாஸ்டிக்குகளை குப்பைகளாக சேர்த்திருக்கிறோம். இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு,கடலில் வாழும் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன. மனிதர்களுக்கு பல வகையிலும் நோய் ஏற்படுத்தும் காரணியாக பிளாஸ்டிக் வஸ்துகள் மாறி, எமனாக நம்மைப் பார்த்து சிரிக்கின்றன. இந்த நிலையில்தான்,பிளாஸ்டிக்கின் தீமையை கருத்தில் கொண்டு தமிழக அரசு வரும் 1 ம் தேதியில் இருந்து தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்திருக்கிறது. ஆனால்,"தமிழக அரசால் எந்த அளவிற்கு இந்த தடை உத்தரவை செயல்படுத்த வைக்கு முடியம் என்று தெரியவில்லை" என்று கூக்குரலும் எழுப்பபடுகிறது.

கரூர் நண்பர் குழு தயார் செய்திருக்கும் செய்தித்தாளான பை

இந்நிலையில்தான்,கரூர் மாவட்டத்தில் அரசு முயற்சிக்கு ஒத்துழைப்பு தந்து,100 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக உருவாக்க ஐந்து சமூக அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்கள் கரம்கோர்த்து புது முயற்சியை எடுத்திருக்கிறார்கள். இணைந்த கைகள்,இளைய தலைமுறை,கரூர் கரங்கள்,நண்பர்கள் ரத்ததான குழு,மக்கள் பாதை உள்ளிட்ட ஐந்து அமைப்புகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து கரூர் மாவட்டத்தை நெகிழி பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற,கரூர் நண்பர்கள் குழு என்ற பொதுவான ஒரு அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

பாலு இதுகுறித்து,மேலும் கூடுதல் தகவல்களை நம்மிடம் நண்பர்கள் ரத்ததானக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாலு பகிர்ந்துகொண்டார். அவர் கூறுகையில், ``ஐந்து அமைப்புகளிலும் 10000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருக்காங்க. பிளாஸ்டிக் ஒழிக்க எல்லோரும் இணைந்திருக்கிறோம். பிளாஸ்டிக்கை ஒழிக்க தமிழக அரசு தடை போட்டிருப்பது வரவேற்க வேண்டிய விசயம். ஆனால்,அரசால் மட்டும் அதை முழுமையாக நிறைவேற்ற முடியாது. மக்களும்,சமூக அமைப்புகளும் அதற்கு ஒத்துழைப்பு தந்தால்தான் அது 100 சதவிகிதம் சாத்தியமாகும்.

அதற்காகதான்,கரூரில் நாங்க இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறோம். பிளாஸ்டிக் பயனபாடு அதிகமாக வியாபார ஸ்தலங்களில் கேரி பேக் என்ற பெயரில்தான் புழங்கப்படுது. மாற்றத்தை அங்கே இருந்து ஆரம்பிக்க இருக்கிறோம். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக செய்திதாளில் பேக் செய்திருக்கிறோம். ஒருநாளைய ஒரு செய்தித்தாள்களை அப்படியே கொண்டு தடிமனாக பையாக்கி, அதன் ஓரங்களில் தையல் போட்டிருக்கிறோம். அதோடு, பிடித்துச் செல்ல வசதியாகவும் அமைத்திருக்கிறோம். சோதனை அடிப்படையில் ஒரு பையில் இரண்டு கிலோ வரை பொருள்களை எடுத்துச் செல்லலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறோம். அதேபோல், டீ,காபி,சாப்பாடு உள்ளிட்டவற்றை வாங்க பழையபடி பித்தளை பாத்திரங்களை எடுத்து வர விழிப்பு உணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.

முதல்கட்டமாக நாளை கரூர் பேருந்துநிலையம் அருகே முதல்கட்ட விழிப்பு உணர்வை செய்ய இருக்கிறோம். செய்தித்தாளில் பத்தாயிரம் பைகளை முதல்கட்டமாக தயார் செய்திருக்கிறோம். அதேபோல், 20 பித்தளைப் பாத்திரங்களையும் வாங்கி இருக்கிறோம்.  அதைக் கொண்டு,நாளை மாலை 4 மணி அளவில் கரூர் பேருந்துநிலையம் அருகே செல்லும் மாணவர்கள், மக்கள், வியாபார ஸ்தலங்களில் பைகளையும், பித்தளைப் பாத்திரங்களையும் கொடுத்து, பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றியும் விளக்க இருக்கிறோம். 

செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட பை

 அதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் மொத்தம் இருக்கும் 147 பள்ளிகளில் சென்று மாணவர்களிடம் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். மரக்கன்றுகளும் கொடுத்து நட வைக்க இருக்கிறோம். அவர்களைக் குழுவாக இயங்க வைத்து, பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்பு உணர்வை செய்ய இருக்கிறோம். மாணவர்களைத் தயார்படுத்தினால்,அவர்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியும். இது இப்படியே தெரு, ஊர், ஊராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, நகரம், மாநகரம், மாவட்டம், மாநிலம்ன்னு விரிவடையும்.

மாணவர்களை ஊக்கப்படுத்த ஆறு மாத காலத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் எந்த மாணவர் அதிகமான பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பாடுப்பட்டிருக்கிறாரோ அவருக்கு லேப்டாப் ஒன்றை பரிசாக தர இருக்கிறோம். மாணவி என்றால் தரமான சைக்கிளை பரிசாக வழங்க இருக்கிறோம். இதனால், இதை ஆரோக்கியமான போட்டியாக எடுத்துக் கொண்டு மற்ற மாணவர்களும் பிளாஸ்டிக் ஒழிப்பில் ஆர்வத்தோடு களமாடுவார்கள். பிளாஸ்டிக்கை ஒழிக்குன் விவகாரத்தில் அதிக அக்கறையோடு செயல்படும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மட்டுமல்லாமல், அவர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அதில் அவர்களை எங்கள் முயற்சியில் மேம்படுத்தச் செய்வோம். கரூர் மாவட்டத்தில் ஜீரோ சதவிதம் பிளாஸ்டிக் பயன்பாடு ஏற்படும் வரை எங்கள் முயற்சி தொடர்ந்தபடி இருக்கும்" என்றார் முத்தாய்ப்பாக!.