குளித்தலை நகராட்சியில் `தமிழுக்கு’ வந்த சோதனை! - தமிழ் ஆர்வலர்கள் வேதனை | Tamil activists slams Kulithalai municipality

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (30/12/2018)

குளித்தலை நகராட்சியில் `தமிழுக்கு’ வந்த சோதனை! - தமிழ் ஆர்வலர்கள் வேதனை

குளித்தலை நகராட்சி

 "குளித்தலை நகராட்சி நிர்வாகம் 'தமிழ்' மொழிக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டது!" என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கிறார்கள்.
 அந்த விவகாரம் என்னவென்று விசார்த்தோம்.

மூலையில் கிடத்தப்பட்ட 'தமிழ் வாழ்க' பலகை

கரூர் மாவட்டத்தில் இருக்கிறது குளித்தலை நகராட்சி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வாங்கி கொடுத்த முன்னாள் முதல்வர் கலைஞர் முதன்முதலில் 1957 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று வெற்றி பெற்றுதான் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அதனால், குளித்தலைப் பகுதி தமிழோடு தொடர்புடைய பகுதியாகக் கருதப்படுகிறது. எண்ணற்ற தமிழ் ஆர்வலர்களையும், தமிழுக்காகத் தொண்டாற்றிய மகத்துவமிக்கவர்களையும் கொண்ட பகுதியாக குளித்தலை விளங்குகிறது. இந்நிலையில், குளித்தலை நகராட்சி நிர்வாகம் தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டதாக இங்குள்ள தமிழ் ஆர்வலர்கள் புழுங்குகிறார்கள். குளித்தலை நகராட்சியின் கட்டட முகப்பில் இருந்த 'தமிழ் வாழ்க' என்ற வாசகங்கள் அடங்கிய சிமெண்ட் பலகையைப் பெயர்த்து, நகராட்சி கட்டத்தின் பின்னே பயன்பாடற்ற பகுதியின் மூலையில் போட்டு வைத்திருப்பதாக அவர்கள் புலம்புகிறார்கள்.

குளித்தலை நகராட்சி..

இதுகுறித்து,நம்மிடம் பேசிய தமிழ் ஆர்வலர்கள், ``தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு நகராட்சி அலுவலங்களில் மட்டுமில்லாமல், எல்லா அரசு அலுவலகங்களிலும் இப்படி 'தமிழ் வாழ்க' என்ற வாசகங்கள் அடங்கிய பலகையை வைத்திருப்பார்கள். தமிழ் மொழியை தமிழ் மொழிக்கு தமிழக அரசு செய்யும் மரியாதையாக இது கருதப்படுகிறது. அப்படிதான் குளித்தலை நகராட்சி கட்டட முகப்பிலும் சிமெண்ட் சிலாப்பில் 'தமிழ் வாழ்க' என்ற வாசகம் எழுத்தப்பட்டு, அமைக்கப்பட்டிருந்து. நகராட்சிக்கு வரும் மக்களுக்கு முன் கம்பீரமாக காட்சியளித்த அந்த பலகையை இரண்டு மாதங்களாக திடீர்ன்னு காணவில்லை. இதனால்,குழம்பிபோன நாங்க நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் போட் கேட்டதுக்கு, முறையான பதிலை சொல்லவில்லை. `இதென்ன குளித்தலை நகராட்சி நிர்வாகத்தால் தமிழுக்கு வந்த சோதனை' என்று நாங்கள் விக்கித்துப் போனோம். தமிழ் மொழிக்காக பாடுப்பட்டு, இந்தி எதிர்ப்பு போரில் தன் உயிரையே துருப்புச் சீட்டாக்கி இன்னுயிர் நீத்த தியாகி வீரப்பன் பிறந்த பகுதி இந்த குளித்தலை.

குளித்தலை நகராட்சி...

இதேபோல், தமிழுக்காக பாடுப்பட்ட எண்ணற்ற புலவர்கள்,பண்டிதர்களை உள்ளடக்கிய மண்ணும்கூட. இப்படி இருக்கையில், குளித்தலை நகராட்சி நிர்வாகம் அப்படி அந்த போர்டை காரணமே இல்லாமல் கழற்றி, மூலையில் வீசி இருப்பது எங்களுக்கு பெரும் வருத்தத்தை தருகிறது. ஏற்கெனவே, தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு தமிழில் இருக்கும் ஊர் எழுத்துகளை தார்பூசி அழித்துவிட்டு, அங்காங்கே இந்தியில் எழுதும் கொடுமை நடக்கிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகராட்சி இப்படி தமிழ் சம்மந்தமான விசயத்தில் மத்திய அரசின் செய்கையைப் போலவே செயல்படுவது உள்ளபடி வேதனையை தருகிறது. குளித்தலை நகராட்சி நிர்வாகம் உடனே அந்த பலகையை எடுத்து,உரிய இடத்தில் பொருத்தனும். இல்லை என்றால், நாங்கள் அந்த வேலையை செய்ய வேண்டி வரும்" என்றார்கள்.