`பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு உணர்வு மாராத்தன்!’- உறுதிமொழியுடன் தொடங்கி வைத்த அமைச்சர் | Plastic awareness marathon in karur - 'we save Nature' peoples take Oath

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:09:15 (31/12/2018)

`பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்பு உணர்வு மாராத்தன்!’- உறுதிமொழியுடன் தொடங்கி வைத்த அமைச்சர்

கரூரில் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்,'பிளாஸ்டிக்கைத் தவிர்ப்போம்; மரங்களை வளர்ப்போம்; மழை நீரை சேகரிப்போம்' உள்ளிட்டவற்றை வலியுறுத்தி இன்று நடத்திய மாராத்தன் போட்டியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

 அமைச்சர் விஜயபாஸ்கர்


இன்று உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருள் எதுவென்றால், அது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குதான். கடல், மலைப்பிரதேசங்கள், சமவெளிகள், நாடு, நகரம், வீடு, சாலை என்று எங்கும் குப்பைகளாக நிறைந்து மனிதர்களுக்கும், மண்ணுக்கும், இயற்கைக்கும் பெரும் சிக்கலை கொடுத்துள்ளது. இதனால், 'பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து, எங்கும் நிறைந்திருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தவில்லை என்றால், ரொம்ப டேஞ்சர்தான்' என்று சூழலியாளர்கள் அபயக் குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். இதன் தீமைகளை உணர்ந்த தமிழக அரசும், வரும் 1-ம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை விதித்திருகிறது.

கரூர்

இதனையொட்டி, பொதுமக்களிடம் தமிழக அளவில் பல்வேறு சமூக அமைப்புகளும், இயற்கை ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் பிளாஸ்டிக் தீமைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில்தான், கரூர் சமூக நண்பர்கள், பொதுநலம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் குறித்த விழிப்பு உணர்வு ஏற்படுத்த மாராத்தன் போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. அதில், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் திருவள்ளுவர் திடலிலிருந்து  விழிப்பு உணர்வு மாராத்தனைத் தொடங்கி வைத்தார்.

உறுதிமொழி


 இந்தப் போட்டியில், கரூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல்,  திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் என 500-க்குக் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருவள்ளுவர் திடலில் தொடங்கிய போட்டி, கோவை சாலை, எம்.ஜி. சாலை,  சர்ச் கார்னர்,  ஜவஹர் பஜார், லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை வழியாக மீண்டும் திருவள்ளுவர் திடலை அடைந்தது.

மாரத்தான்

இந்தப் போட்டியில், ஆண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த கோபால் முதல் பரிசையும், கோவையைச் சேர்ந்த சந்தீப் 2-ம் பரிசையும், திண்டுக்கல்லைச் சேர்ந்த கார்த்திக் 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவில், 3 பரிசுகளையும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சோனியா, யசோதா, ஸ்வேதா ஆகியோர் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசுகளை வழங்கினார். அதன்பிறகு, `இயற்கையை, மண்ணை காப்பதற்கு ஏதுவாக வரும் 1-ம் தேதியிலிருந்து பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தமாட்டேன்' என்று அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.