`குற்றாலம் அருவியில் தண்ணீரோடு விழுந்த மலைப்பாம்பு!’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் | tourists were panic for a snake fell down in courtallam falls

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (30/12/2018)

கடைசி தொடர்பு:07:43 (31/12/2018)

`குற்றாலம் அருவியில் தண்ணீரோடு விழுந்த மலைப்பாம்பு!’ - பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

குற்றாலம் அருவியில் தண்ணீருடன் மலைப்பாம்பு அடித்து வரப்பட்டது. தண்ணீரோடு பாம்பு விழுந்ததால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

குற்றாலம்

நெல்லை மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை பெய்வதால் அருவிகளில் நீர் வரத்து சீராக உள்ளது. அதனால், ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து நீராடி விட்டுச் செல்கிறார்கள். ஆகவே, தற்போது அருவிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை என்பதால் வெளியூர்களில் இருந்து ஏராளமான பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த நிலையில், இன்று பெண்கள் பகுதியில் வழக்கம்போல கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், தண்ணீருடன் சேர்ந்து ஏதோ சத்தத்துடன் கீழே விழுந்துள்ளது. அதனால் அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து பார்த்தபோது காலுக்குள் மலைப்பாம்பு ஒன்று நழுவிச் சென்றுள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சியிலும் பயத்திலும் பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் குற்றாலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த வனத்துறையினர் பாம்பைத் தேடினார்கள். ஆனால், அங்கிருந்து தப்பிய பாம்பு எங்கேயோ பதுங்கிக் கொண்டது. அதனால் பாம்பைப் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் சென்று விட்டனர். 

பாம்பு பிடிபடாததால் பொதுமக்களிடம் அச்சம் நீங்கவில்லை. அதனால், குற்றாலம் காவல்துறையினர் செங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கும் வனஆர்வலர் ஷேக் உசேனுக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத்துறையினர் அருவி மற்றும் தாடாக பகுதிகளில் பாம்பைத் தேடினார்கள். வன ஆர்வலர் ஷேக் உசேனும் பாம்பு எங்கேயாவது பதுங்கி இருக்கிறதா எனத் தேடினார். சுமார் ஒரு மணி நேரத் தேடலுக்குப் பின்னர், மலைப் பாம்பு அங்குள்ள புதருக்குள் பதுங்கி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

பின்னர், தீயணைப்புத் துறையினரும் வன ஆர்வலர் ஷேக் உசேனும் சேர்ந்து அந்தப் பாம்பைப் பிடித்து பத்திரமாக அதை வாகனத்தில் ஏற்றி அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர். பிடிபட்ட மலைப்பாம்பு 12 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அதன் எடை 40 கிலோவாக இருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதியில் பெய்யும் மழையால் அருவியில் அடித்து வரப்பட்ட மலைப்பாம்பு, பயணிகள் குளிக்கும் பகுதியில் விழுந்த சம்பவம் சுற்றுலாப் பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.