`குடியாத்தம் வியாபாரிக்கு வெட்டு!’ - கூலிப்படையைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல் | 'Cut to Graduate Merchant!' - The police are unable to catch a police force

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:08:19 (31/12/2018)

`குடியாத்தம் வியாபாரிக்கு வெட்டு!’ - கூலிப்படையைப் பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்

குடியாத்தம் அருகே வியாபாரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பிய கூலிப்படைக் கும்பல் பற்றி துப்புக் கிடைக்காமல் போலீஸார் திணறி வருகின்றனர்.

வியாபாரி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமியைச் சேர்ந்தவர் சிவா (44). பரதராமி மெயின் ரோட்டில் செருப்புக் கடை வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு சிவா, தன்னுடைய மகன் பிறந்தநாளுக்கு சாக்லெட் வாங்குவதற்காக மகன் ஜெகன், மகள் பூஜிதாவை பைக்கில் அழைத்துக்கொண்டு பரதராமி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள பல்பொருள் அங்காடிக்குச் சென்றார். அப்போது, பைக்கில் வந்த மூன்று பேர், சிவாவை திடீரென இடைமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தலை, கையில் சிவாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. சிவா உயிர் தப்பிக்க பல்பொருள் அங்காடிக்குள் ஓடினார். அவரின் பிள்ளைகளும் ‘அப்பாவை யாராவது காப்பாற்றுங்கள்’ என்று கதறிக்கொண்டு கெஞ்சினர். சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் கூலிப்படைக் கும்பல் பைக்கில் ஏறி தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த சிவா, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் வழக்கு பதிவு செய்து கூலிப்படைக் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சம்பவம் நடந்து 8 நாள்களாகியும் கூலிப்படை பற்றிய துப்பு துலங்காததால் போலீஸார் திணறி வருகின்றனர். சிவாவுக்கும், அவரின் சித்தப்பா குடும்பத்துக்கும் முன்விரோதம் உள்ளது. எனவே, சித்தப்பா மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகச் சிவா புகாரில் தெரிவித்திருந்தார். சிவாவின் சித்தப்பா சீனிவாசன் மற்றும் அவரின் மகன் கார்த்தி ஆகியோரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரிக்காமலேயே சிறிது நேரத்தில் இருவரையும் போலீஸார் விடுவித்துவிட்டனர். ‘மாமூல் வாங்கிக்கொண்டு போலீஸார் அவர்களை விசாரிக்கவில்லை’ என்று புகார் கூறப்பட்டது. இதுபற்றி, சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலையிடம் கேட்டோம். `கூலிப்படை கும்பல் பற்றி எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.