கோட்டையை முற்றுகையிடும் விவசாயிகளுடன் பா.ம.க கைகோக்கும்! - அன்புமணி ராமதாஸ் பேச்சு | Anbumani ramadoss supports farmers protest

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/12/2018)

கடைசி தொடர்பு:08:21 (31/12/2018)

கோட்டையை முற்றுகையிடும் விவசாயிகளுடன் பா.ம.க கைகோக்கும்! - அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னையில் விவசாயிகள் நடத்தவிருக்கும் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும் கலந்துகொள்ளும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

அன்புமணி

விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு கொங்கு மண்டல விவசாயிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 14 நாள்களாகத் தொடர்ந்து காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வந்த விவசாயிகள், இன்றைய தினம் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும், வரும் ஜனவரி 3-ம் தேதி சென்னையில் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று போராடும் விவசாயிகளுக்கு தங்களின் ஆதரவை நேரில் தெரிவிக்க பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கள்ளிப்பாளையம் பகுதிக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விவசாயிகளின் போராட்டத்துக்கு மத்திய மாநில அரசுகள் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு விவசாயிகளை மிரட்டியும், அச்சுறுத்தியும் நிலங்களை அபகரிப்பது சட்டத்துக்குப் புறம்பானது. விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்களைக் கொண்டு செல்லும் இத்திட்டத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட்டு கேரளா மற்றும் இதர மாநிலங்களில் செயல்படுத்தியிருப்பதைப்போல சாலையோரங்களில் கேபிள் அமைத்து மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 3-ம் தேதி சென்னையில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்துக்கு பாட்டாளி மக்கள் கட்சியும் முழு ஆதரவு அளிப்பதோடு, முற்றுகைப் போராட்டத்திலும் பா.ம.க கலந்துகொள்ளும்" என தெரிவித்துவிட்டுச் சென்றார்.