வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:08:25 (31/12/2018)

``தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை மக்கள் வேரோடு பிடுங்கி எறிவார்கள்" - ஹெச்.ராஜா!

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை மக்கள் வேரோடு பிடுங்கி எறிவார்கள் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

ஹெச்.ராஜா

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கோவை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச்.ராஜா, ``பா.ஜ.க-வின் மூத்தத்  தலைவர்கள் 40 பேர் நான்கு குழுக்களாக பிரிந்து 234 தொகுதிகளிலும் பூத் பொறுப்பாளர்களைச் சந்தித்துள்ளோம் கடந்த ஜூலை மாதம் தமிழகம் வந்த பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மக்களை தேசிய ஜனநாயக கூட்டணியாக அணுகுவோம் என்று சொல்லியிருக்கிறார். எனவே, அதே முறையைப் பின்பற்ற இருக்கிறோம். பா.ஜ.க ஊழலற்ற ஆட்சி புரிந்துள்ளது. மேலும், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து அவர்களது கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்கிறேன். ஏனென்றால், பிறக்கின்ற குழந்தையை குறைப் பிரசவமாக பிறக்க வைத்தது அவர்தான். பா.ஜ.க-வின் நான்கரை ஆண்டுகள் ஆட்சியில் 22 கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர். மத்திய அரசின் சாதனைகள், ஊழல் இல்லாத நிர்வாகத்தை கணக்கில் கொண்டு, ஊழல் பிறப்பிடமாக இருக்கிற காங்கிரஸ், தி.மு.க கட்சிகளை மக்கள் தமிழகத்தில் வேரோடு பிடுங்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் மற்றும் வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் வாங்கியதில், அரபு நாட்டில் இருந்து தரகர் ஒருவர் சோனியாகாந்தி மற்றும் ராகுலுக்கு கையூட்டு கொடுத்திருப்பதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2005-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரை தொட்டதில் எல்லாம் ஊழல் செய்த ஆட்சி ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி. அனைத்து வகையிலும் ஊழல் செய்த கட்சியினர்,  கூட்டு சேர்த்து மீண்டும் வர முயற்சிப்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ்காரர்கள், இந்துக்களை அவமதிக்கும் கருத்துகள் படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றால் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது என்கிறார்கள் . ஆனால், சஞ்சய் பானு எழுதிய விபத்து பிரதமர் என்ற படம் வருவதற்கு மட்டும் அதே காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்றத்தில் தடை போடுகிறார்கள். இதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது" என்றார்.