புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - 25 பேர் படுகாயம்! | Accident near Pudukottai 25 people were injured

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:08:36 (31/12/2018)

புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - 25 பேர் படுகாயம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

 

பட்டுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாகப் புதுக்கோட்டைக்குத் தனியார் பேருந்து புறப்பட்டது. ஆலங்குடி அருகே மணிப்பள்ளம் என்ற பகுதியில் அதிவேகமாக வந்தபோது,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பேருந்து அதிவேகத்தில் வந்ததால், பிரேக் அடித்தும் பேருந்தை ஒட்டுநரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால், எதிர்பாராத விதமாகக் கண் இமைக்கும் நேரத்தில், பலத்த சத்தத்துடன் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. பலரும் பேருந்தில் இருந்து வெளிவர முயற்சி செய்து முடியாமல் தத்தளித்தனர். பலரும் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.., என்று கூச்சலிட்டனர். அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அனைவரையும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்ததோடு, அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பேருந்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், தகவல் அறிந்த புதுக்கோட்டை எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு விபத்து நடந்த இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மேலும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சித்தலைவர் கணேஷ் ஆகியோர்  காயமடைந்தவர்களை நேரடியாகப் பார்த்து விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.


காவல்துறையிடம் கேட்டபோது, `ஒட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியுள்ளார். அதிவேகமாகச் சென்ற பேருந்து வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. அதிக வேகமாக இயக்கப்பட்டதாலும், ஓட்டுநரின் கவனக்குறைவும் தான் விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றனர்.