`உலக நாடுகளுக்கு இணையாக தமிழக சுகாதாரத்துறை உள்ளது!' - அமைச்சர் விஜயபாஸ்கர் | MK Stalin has no access to criticize the health department says Minister vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:08:42 (31/12/2018)

`உலக நாடுகளுக்கு இணையாக தமிழக சுகாதாரத்துறை உள்ளது!' - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை உலக நாடுகளுக்கு இணையாக வளர்ந்து வரும் நிலையில், சுகாதாரத் துறையை விமர்சிக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி  தமிழக சுகாதாரத்துறையையும், செவிலியர்களையும் மருத்துவர்களையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது  எனச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ``தமிழகத்தில் விபத்துகளைக் குறைக்க தமிழகம் முழுவதும் 75 இடங்களில் 190 கோடி செலவில் அவசரக் கால சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் மட்டும் கடந்த ஒரு வருடத்தில் விபத்து கால இறப்பு சதவிகிதம் என்பது 8.5 சதவிகிதத்திலிருந்து 2.8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மொபைல் சிடி ஸ்கேன் தமிழகத்தில் 15 கோடி மதிப்பில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழக சுகாதாரத்துறையானது, உலக நாடுகளின் சுகாதாரத்துறைக்கு இணையாக வளர்ந்து வருகிறது. சுகாதாரத் துறையை விமர்சிக்க தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை, தமிழக சுகாதாரத்துறைக்காக சிறு துரும்பைக்கூட தி.மு.க அரசு அசைக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக சுகாதாரத்துறையையும், செவிலியர்களையும் மருத்துவர்களையும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். இது, கடும் கண்டனத்துக்குரியது. அவரின் விமர்சனத்தைப் பொதுமக்கள் ஏற்கமாட்டார்கள்.


விருதுநகரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் வேதனை தரக்கூடியது. இதில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்குகின்றனர்" என்றார்.