ஸ்டெர்லைட்டை மூடிட சிறப்புச்சட்டம் இயற்றுங்கள்! - முதல்வருக்குத் தபால் அனுப்பும் மக்கள் | People send letters to CM EPS to urge passing special law to close sterlite industries

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (31/12/2018)

கடைசி தொடர்பு:10:30 (31/12/2018)

ஸ்டெர்லைட்டை மூடிட சிறப்புச்சட்டம் இயற்றுங்கள்! - முதல்வருக்குத் தபால் அனுப்பும் மக்கள்

ஜனவரி 2-ம் தேதி கூடும் தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், கட்சியினர், அமைப்பினர் என பலதரப்பினரும் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

தபால் அனுப்பும் மக்கள்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மக்களின் தொடர் போரட்டத்துக்குப் பிறகு, கடந்த மே 28-ம் தேதி நிரந்தரமாக மூடப்படுவதாக அரசாணை வெளிடப்பட்டு மூடப்பட்டது. தமிழக அரசின் இந்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திடுமாறு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை அமைத்தது.

தபால் அனுப்பும் மக்கள்

`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறானது’ என அக்குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து, `சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம்’ என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை  எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைப்புகள், கிராம மக்கள் போரட்டங்களில் ஈடுபட்டனர். பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

தபால் அனுப்பும் மக்கள்

தொடர்ந்து, வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட ஆதரவு சங்கத்தினர் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் எனவும், ஆலையைத் திறக்க கூடாது என ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைப்புகள், கிராம மக்களும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மண்ணில் இருந்து நிரந்தரமாக அகற்றிட வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்றிட வலியுறுத்தி முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

தபால் அனுப்பும் மக்கள்

 

இது குறித்து ஸ்டெர்லைட்க்கு எதிரான தமிழர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ``ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்க்கைக்கும், உயிர்ச்சூழலுக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஆலையை மூடிட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். சுத்தமான காற்றை சுவாசிக்க, நஞ்சை கக்கும் ஆலையை நிரந்தரமாக தூத்துக்குடியை விட்டு அகற்றிட வரும் ஜனவரி 2-ம் தேதி,  சட்டமன்றத்தில் சிறப்புச்சட்டம் இயற்றிட வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கும் விதமாக தபால் அட்டை அனுப்பிட வேண்டும் என மக்களிடமும் வலியுறுத்தியுள்ளோம்.

தபால் அனுப்பும் மக்கள்

ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டார கிராம மக்கள், வணிகப் பெருமக்கள், மீனவர்கள், உப்பு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள், கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் தபால் அட்டை அனுப்பி வருகின்றனர். இந்த ஆலையை நிரந்தரமாக மண்ணை விட்டு அகற்றும் வரை போராட்டம் தொடரும்.” என்றார்.  ``2019-ம் ஆண்டு புத்தாண்டில் தூத்துக்குடி மக்கள் ஆரோக்கியத்துடனும், சுகாதாரமான சுற்றுச்சூழலுடன் நல்வாழ்வு வாழ்ந்திட நஞ்சை கக்கும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக தமிழ் மண்ணை விட்டு அகற்றிட வரும் ஜனவரி 2-ம் தேதி சட்டமன்றக்  கூட்டத்தில் சிறப்புச்சட்டம் இயற்றிடுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க