வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (31/12/2018)

கடைசி தொடர்பு:11:40 (31/12/2018)

1000 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்; விழும்போதே குதித்த இளைஞர்கள்! - கொடைக்கானலில் நடந்த பயங்கரம்

புத்தாண்டு கொண்டாட கொடைக்கானலுக்கு வந்த கேரள இளைஞர்களின் கார் ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தது. அப்போது, காரின் கதவைத் திறந்து 4 பேர் குதித்து தப்பினர். டிரைவர் பலியானார். காணாமல்போன இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆயிரம் அடி பள்ளத்தில் பாய்ந்த கார்

பைக் ரைடிங், மது போதை போன்ற உற்சாக மனநிலையில் புத்தாண்டை வரவேற்பது இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன் ஆகி வருகிறது. புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக மலை வாசஸ்தலங்களுக்கு இளைஞர் கூட்டம் படையெடுப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தற்போது இளைஞர்களால் நிரம்பி வழிகிறது. விதவிதமான மோட்டார் சைக்கிள்களில் வந்து குவிந்துள்ளனர் இளைஞர்கள்.

மரத்தில் பலியான கார் டிரைவர்

இதனிடையே, புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து கொடைக்கானலுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக ஏழு இளைஞர்கள் இனோவா கார் மூலமாக வந்து கொண்டிருந்தனர். தற்போது கொடைக்கானலில் பனிப்பொழிவு காரணமாகக் கடுமையான பனி மூட்டம் நிலவுகிறது. முன்னால் செல்லும் வாகனம் தெரியாத அளவுக்குப் பனி மூட்டம் காணப்படுகிறது.

காரில் இருந்து குதித்து தப்பிய இளைஞர்கள்

இந்நிலையில், பழநி -கொடைக்கானல் சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில் வந்தபோது, கார் நிலைதடுமாறி அந்தரத்தில் பறந்து, ஆயிரம் அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் பாய்ந்தது. கார் கதவை திறந்து குதித்ததில் நான்கு பேர் காயங்களுடன் தப்பித்தனர். கார் கதவை திறந்து குதித்த டிரைவர், மரத்தின் மீது சிக்கிப் பலியானார். இன்னும் இருவரைத் தேடும் பணி நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு, பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க