`நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!' - தொழில்முனைவோர்களுக்கு அரசு கொறடா ராஜேந்திரன் அறிவுரை | Instruction to entrepreneurs by Rajendran

வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (31/12/2018)

கடைசி தொடர்பு:14:45 (31/12/2018)

`நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்!' - தொழில்முனைவோர்களுக்கு அரசு கொறடா ராஜேந்திரன் அறிவுரை

80 கோடி மதிப்பில் பல்வேறு தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ள 55 முதலீட்டாளர்களுக்கு, அதற்கான ஒப்பந்தங்களை அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன் வழங்கினார்.

                                               

                                          

சென்னையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முதலீட்டாளர்கள் தேர்வு மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, அரியலூர் மாவட்டத்தில் 80 கோடி மதிப்பில் பல்வேறு தொழில்கள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ள 55 முதலீட்டாளர்களுகு, அதற்கான ஒப்பந்தங்களை வழங்கினர்.

                                          

கூட்டத்தில் பேசிய அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கான திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன்கூடிய கடனுதவி வழங்கப்பட்டுவருகிறது. வேலைவாய்ப்புக்காக அண்டை மாநிலங்களுக்கு செல்வதைத் தவிர்க்கும் வகையில், படித்த மற்றும் படிக்காத இளைஞர்கள் சுயமாகத் தொழில் தொடங்கும் வகையில் இவ்வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

                                            

மாவட்டத்தின் முதன்மைத் தொழிலாக உள்ள விவசாயம் மற்றும் சிமென்ட் தொழிற்சாலை சார்ந்த தொழில்களை நடத்த தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும். இதனால், நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் உருவாக்கப்பட்ட பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது. தொழில் ஆரம்பிப்பதற்கு முன், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், உற்பத்திசெய்த பொருள்களை விற்பனை செய்யும் சந்தை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து தொழில் தொடங்க வேண்டும். தொழில் தொடங்குவது முதல் அதைப் பதிவுசெய்யும் முறை, மூலப்பொருள்கள் கிடைக்கும் இடங்கள், உற்பத்திசெய்த பொருள்களை விற்பனைசெய்யும் முறை,  ஆன்லைன் மூலம் சந்தைப்படுத்துதல், தரச்சான்று வாங்குவதற்கான முறைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட தொழில் மையம் வழங்கிவருகிறது.

                                                    

இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் என இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்கள் கண்டறியப்பட்டு, தொழில் தொடங்கும் முனைவோர்களுக்கு மானியத்துடன்கூடிய கடனுதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதை, தொழில்முனைவோர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதன்மூலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பெறுகுவதோடு, நாட்டின் தொழில் வளர்ச்சியும் பெருகும்" என்று கூறினார். புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர், தொழில் தொடங்க வங்கிக் கடன் திட்டத்துக்கு விண்ணப்பித்தோர் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பலரும் கலந்துகொண்டனர்.