வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (31/12/2018)

கடைசி தொடர்பு:16:05 (31/12/2018)

நாகையில் கரை ஒதுங்கிய வெளிநாட்டு மர்மப் படகு? ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்

நாகை அருகே, பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில், வெளிநாட்டுப் பட கு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த சாமந்தான் பேட்டை மீனவ கிராம கடற்கரையில், மூங்கில் படகு ஒன்று கரை ஒதுங்கியதை அடுத்து, படகில் வெளிநாட்டினர் எவரும் வந்து இறங்கியுள்ளனரா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

கரை ஒதுங்கிய படகை ஆய்வுசெய்தபோது, அதில் புத்தர் சிலை மற்றும் புத்தர் படங்களுடன் தெப்பம் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட அப்பகுதி மீனவர்கள், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மியான்மர், தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த படகா என வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். படகு, தெப்பம் போல அலங்கரிக்கப்பட்டிருப்பதால், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்ஃபி எடுத்துவருகின்றனர்.

மீனவர்கள் கூறுகையில், 'மியான்மர் நாட்டில் தூண்டில் மீன்பிடிப்புக்குப் பயன்படுத்தப்படும் படகு. இப்படகில் மீனவர்கள் குழுவாகச் சென்று பல நாள்கள் கடலில் தங்கி மீன்பிடிப்பதற்கு ஏதுவாக படகு கட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் வங்கக் கடலில் ஏற்பட்ட பருவ மாற்றத்தால், படகு திசை மாறி வந்துள்ளது. ஆனால், படகில் இருந்தவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் மர்மமாக உள்ளது' என்றனர்.

கரை ஒதுங்கிய படகைப் பார்வையிட்ட கடலோர காவல் படை போலீஸார், படகில் மர்ம நபர்கள் வந்தார்களா என்றும், கடல் சீற்றத்தில் சிக்கியிருந்தாலும் படகு சேதமடையாமல் எப்படி கரை ஒதுங்கியது... படகில், சமீபத்தில் பூஜை நடந்ததற்கான பொருள்கள் இருப்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்

பல நூறு மைல்கள் கடந்து, வெளிநாட்டைச் சேர்ந்த படகு தமிழகத்தில் கரை ஒதுங்கியிருப்பது, இந்திய கடல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டுள்ளனரா என்ற கேள்வியெழுப்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க