வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (31/12/2018)

கடைசி தொடர்பு:17:30 (31/12/2018)

`அமைச்சர் இல்லாமல் எப்படி நடத்தலாம்’ - கோஷ்டி பூசலால் பாலம் பூமி பூஜை நிறுத்தம்

கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும் தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத் தனி கோஷ்டியாகவும், அ.தி.மு.க கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பியுமான அருண்மொழித்தேவன் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். எம்.பி. அருண்மொழித்தேவன் அணியில் எம்.எல்.ஏ-க்கள் பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் பாண்டியன், காட்டுதன்னார்கோயில் முருகுமாறன் ஆகியோர் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுக

மேல்குமாரமங்கலம்  கிராமத்துக்கும், விழுப்புரம் மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே தென்பெண்ணை ஆற்றில் புதியதாக உயர் மட்ட பாலம் கட்டக் கடந்த 2015ம் ஆண்டு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இங்கு உயர்மட்ட பாலம் கட்ட பொதுப்பணித்துறை சார்பில் ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த இரண்டு மாதம் முன்பு மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பாலம்கட்ட நடவடிக்கை எடுத்ததாக அமைச்சர் எம்.சி சம்பத், சத்தியாபன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஆகிய இருதரப்பினரும் நன்றி தெரிவித்து தனித்தனியே பேனர் வைத்திருந்தனர்.

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவுக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தொகுதி எம்.எல்.ஏ சத்யாபன்னீர்செல்வம் கலந்துகொள்வதாகக் கூறி ஆற்றில் விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனர். இது குறித்து அறிந்த அமைச்சர் எம்.சி சம்பத்தின் ஆதரவாளர்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் தென்பெண்ணை ஆற்றுக்கும் செல்லும் வழியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

இதனால் பூமி பூஜைக்கு எந்த எம்.எல்.ஏ ஆதரவாளர்கள் கார்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு அவர்கள் அமைச்சர் சம்பத் ஊரில் இல்லாத நேரத்தில் எப்படி பூமி பூஜை நடத்தலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர் சம்பத் மற்றும் எம்.எல்.ஏ சத்யாபன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து போலீஸார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இப்பிரச்னை காரணமாகப் பூமி பூஜை விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.