இலவசப் பயிற்சியால் அரசு ஊழியர்களான 150 பட்டதாரிகள் - ராமநாதபுரத்தில் தொடரும் சேவை | 150 youngsters got government job because of free training

வெளியிடப்பட்ட நேரம்: 16:53 (31/12/2018)

கடைசி தொடர்பு:16:53 (31/12/2018)

இலவசப் பயிற்சியால் அரசு ஊழியர்களான 150 பட்டதாரிகள் - ராமநாதபுரத்தில் தொடரும் சேவை

 

பட்டதாரிகள் பயிற்சிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கும் விழா

ராமநாதபுரத்தில் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் இலவசப் பயிற்சி மையத்தில் பயின்ற 150 பட்டதாரிகள். அரசு வேலைகளில் சேர்ந்துள்ளனர். தற்போது அவர்களில் பலர் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகின்றனர். 

இன்றைய காலகட்டத்தில் அரசு வேலை என்பது குதிரைகொம்பாகிவிட்டது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இதனால் போட்டித் தேர்வுகளை எழுதும் ஆர்வம் பட்டதாரி இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் சார்பில் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. 

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில் டாக்டர் அம்பேத்கர் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி மையம் கடந்த 8 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பயிற்சி பெற்றுவருகின்றனர். 8 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்டவர்கள் அரசு வேலையில் சேர்ந்துள்ளதாகப் பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சுந்தரவடிவேல் தெரிவித்தார். அவரிடம் பேசினோம். 

 ``நான் வங்கியில் பணியாற்றிவருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் இலவச வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை தொடங்கினோம். இந்தப் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பவர்களுக்கு அனைத்தும் இலவசமாகவே வழங்குகிறோம். பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் தன்னலமற்று எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த மையத்தில் பயிற்சி அளிக்கின்றனர். இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 23 மாணவர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 4ல் தேர்ச்சி பெற்று பல்வேறு துறைகளில் விரைவில் பணியில் சேர உள்ளனர். தற்போது, 160க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் 

 அரசு வேலையில் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்குப் நினைவுப்பரிசு வழங்கும் பாலு

ராமநாதபுரம் மாவட்டம் என்றாலே வறட்சி வறுமைதான் நினைவுக்கு வரும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இதனால்தான் படித்த இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இந்தப் பயிற்சி மையத்தை நடத்திவருகிறோம். குரூப் 2வில் முதற்கட்ட தேர்வில் 23 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு அடுத்தகட்ட தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்துவருகின்றன. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ளவர்கள் இந்தப் பயிற்சி மையத்தில் பயின்று வருகின்றனர். நன்கொடையாளர்கள் மூலம் சிறப்பான பயிற்சியை அளித்துவருகிறோம். பயிற்சி வகுப்புகளை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. இந்தக் குழுவில் அரசுப் பணியில் உள்ளவர்களும் உள்ளனர். ஒருங்கிணைந்து நாங்கள் செயல்படுவதால் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துவருகிறோம். எங்கள் பயிற்சி மையத்தில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகளவில் தேர்ச்சி பெற்றுவருகின்றனர்"என்றார். 

 இந்த ஆண்டு அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா சத்திரக்குடியில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.பாலு பங்கேற்று பேசினார். இந்தப் பயிற்சி மையத்தில் பயின்று அரசு வேலையில் சேர்ந்த பலர், மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகின்றனர்.