வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:18:00 (31/12/2018)

`கர்ப்பிணிப் பெண்ணை ஏதாவது செய்துவிடுவார்கள்!’ - அச்சம் தெரிவிக்கும் ஹெச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்கம்

ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் மரணமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ என ஹெச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்கத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு டிசம்பர் 3-ம் தேதி ஹெச்.ஐ.வி பாதித்த நபரின் ரத்தம் ஏற்றப்பட்டது. சில நாள்களுக்குப் பின்பே இந்த உண்மை வெளியே தெரிய ஆரம்பித்தது. இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாகத் தமிழக அரசு மருத்துவர்களைக் கொண்டே விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹெச்.ஐ.வி. உள்ளோர் நலச்சங்கம்h

இந்தச் சம்பவத்தால் மனஉளைச்சல் அடைந்த ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த கமுதியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 25-ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். சம்பவத்தை முதலில் வெளியே கொண்டு வந்த அந்த இளைஞர் மரணமடைந்த நிலையில், தற்போது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என ஹெச்.ஐ.வி உள்ளோர் நலச்சங்கத்தினர் அச்சமடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு தலைவர் ராமபாண்டியன் நம்மிடம் கூறும்போது, ``ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த நபர் மனஉளைச்சலில் இருந்ததால் தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நன்றாகத்தான் இருந்தார். ஆனால், திடீரென மரணம் அடைந்துள்ளார். இந்த விஷயத்தில் அரசு மிகவும் மெத்தனமாக இருந்துள்ளது. இளைஞரின் மரணத்தில் மர்மம் உள்ளது. இந்தச் சம்பவத்தை மூடி மறைக்கவே அரசு முயன்று வருகிறது. இளைஞரின் மரணத்துக்கு தமிழக அரசும், சுகாதாரத் துறையுமே பொறுப்பேற்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

கர்ப்பிணி

ஹெச்.ஐ.வி உள்ளோர் நலச் சங்க மாநிலத் தலைவர் நாகராஜ் கூறும்போது, ``ஹெச்.ஐ.வி ரத்தம் கொடுத்த இளைஞர் முந்தைய நாள் இரவு நன்றாகவே இருந்துள்ளார். ஆனால், அடுத்தநாள் அதிகாலை திடீரென அவர் உயிரிழந்துள்ளார். இது நம்பும்படியாக இல்லை. கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவரமே முதலில் இவர் மூலமாகத்தான் வெளியே வந்தது. தற்போது மருத்துவமனைகளில் தவறாக ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாகப் பலரும் புகார் கூறி வருகின்றனர். இதனால் அரசுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞரின் திடீர் மரணம் சந்தேகமாக உள்ளது. இது சம்பந்தமாகத் தீவிர விசாரணை நடத்த வேண்டும்.

கர்ப்பிணி

10 சதவிகிதம் பேருக்கு ரத்தமாற்றம் மூலமாகத்தான் ஹெச்.ஐ.வி வருவதாக அரசு ஆவணத்திலேயே உள்ளது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சிதான் நடைபெற்று வருகிறது. ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் வெளியே தெரிந்ததால்தான் அரசு வேறு வழியின்றி அதை ஒப்புக்கொண்டுள்ளது. இல்லையெனில், எப்போதோ மூடி மறைத்திருக்கும். தற்போது அந்த இளைஞர் மரணம் அடைந்த நிலையில் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணுக்கும் நிறைய ஆபத்துகள் உள்ளன. சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மஞ்சள்காமாலை நோயும் உள்ளது. இந்த நோயைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணை ஏதேனும் செய்துவிடுவார்களோ என எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.