‘கடனில் நகரும் வாழ்க்கை; கேள்விக்குறியான கல்வி’ - கலக்கத்தில் பட்டாசு உற்பத்தித் தொழிலாளர்கள் | cracker labours Protest in Virudhunagar

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (31/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (31/12/2018)

‘கடனில் நகரும் வாழ்க்கை; கேள்விக்குறியான கல்வி’ - கலக்கத்தில் பட்டாசு உற்பத்தித் தொழிலாளர்கள்

விவசாயக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தூக்குமாட்டும் போராட்டம் போன்ற ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளனர். தற்போது பட்டாசு ஆலைகளைத் திறக்கக் கோரி பட்டாசுத் தொழிலாளர்கள் சார்பில் ஆதித்தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூக்கு மாட்டும் போராட்டம் நடத்தினர்.

தூக்கு மாட்டும் போராட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் 1007 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 8 லட்சம் பேர் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர். ஆனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றம் பட்டாசு உற்பத்திக்கு கடும் கட்டுப்பாடு விதித்தது. இதனால் பட்டாசு ஆலைகள் முழுவதுமாக மூடப்பட்டு கடந்த 2 மாதங்களாக வேலையின்றி பட்டாசுத் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். உடனடியாக பட்டாசு ஆலைகளைத் திறந்து வேலைவாய்ப்பு வழங்கக் கோரி ஆதித்தமிழர் கட்சியினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூக்கு மாட்டும் போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

இதுகுறித்து ஆதித்தமிழர் கட்சியின் விருதுநகர் மாவட்டத் தலைவர் சுந்தரராஜன் கூறும்போது, ``சிவகாசி பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். நிலமற்ற தொழிலாளர்களுக்கு இதுதான் ஆறுதல். ஆனால், மாசு ஏற்படுவதாகக் கூறி பசுமை பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால், இதைவிட அதிக மாசு ஏற்படுத்தும் கார், ஏசி உற்பத்திக்குத் தடை விதிக்கப்படவில்லை.

ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் பட்டாசு உற்பத்திக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடன் வாங்கியே எங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளிக்குக்கூட அனுப்ப முடியாமல் அவர்களின் கல்வியே பாதிக்கப்பட்டுள்ளது.

ஆதித்தமிழர் கட்சி

நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி பட்டாசு ஆலைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைக் கைவிட வேண்டும். இல்லையெனில் 8 லட்சம் பேருக்கும் மாற்று வழி ஏற்படுத்த வேண்டும். எனவே, பட்டாசு ஆலைகளை உடனடியாகத் திறக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 மாதங்களாக வேலையின்றி அன்றாட வாழ்க்கையை நடத்த கடுமையான சிரமங்களை சந்தித்து வரும் தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.