`எங்க குடும்ப விவகாரத்துல டிஎஸ்பி கட்டப்பஞ்சாயத்து செய்றார்!' - தேனி கலெக்டரிடம் முறையிட்ட முதியவர் | Petition against DSP filed in theni collector office

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (31/12/2018)

கடைசி தொடர்பு:20:30 (31/12/2018)

`எங்க குடும்ப விவகாரத்துல டிஎஸ்பி கட்டப்பஞ்சாயத்து செய்றார்!' - தேனி கலெக்டரிடம் முறையிட்ட முதியவர்

பெரியகுளம் டிஎஸ்பி எங்கள் குடும்ப விவகாரத்தில் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக தந்தை, மகன் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்து, கலெக்டர் பல்லவி பல்தேவிடம் முறையிட்டனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி வடக்குத் தெருவில் வசிப்பவர், பெருமாள் (வயது 74). இவர், தனது மகன் முருகன் என்பவருடன் புகார் மனு அளிப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். பெருமாளிடம் நாம் பேசியபோது, “தேவதானப்பட்டி கிராமத்தில் வசிக்கும் எனக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் மூன்று ஆண் குழந்தைகள். அனைவருக்கும் திருமணம் செய்துவைத்துவிட்டேன். அவர் அவர் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு நல்லபடியாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், என்னையும் என் மனைவியையும் யாரும் பார்த்துக்கொள்ளவில்லை. உடல்நிலை சரி இல்லாத எங்களை என் கடைசி மகன் முருகன்தான் கவனித்துவருகிறார். இந்நிலையில், எனக்கு சொந்தமான என்னுடைய சுய சம்பாத்தியத்தில் வாங்கிய 9 ஏக்கர் 59 சென்ட் நிலத்தை என்னையும், என் மனைவியையும் கவனித்துவரும் என் கடைசி மகனுக்கு தானமாக எழுதிவைத்துவிட்டேன். இதை அறிந்த என் மற்ற மகன்கள் மற்றும் மகள், நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், எங்கள் தரப்பில் ஆவணங்கள் எல்லாவற்றையும் தாக்கல்செய்துள்ள நிலையில், அவர்கள் தரப்பில் தேவையான ஆவணங்கள் எதுவும் தாக்கல்செய்யாமல் இருக்கின்றன. வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவரும் சூழலில், சம்மந்தப்பட்ட நிலத்தில் உள்ள தென்னை மரங்களில் தேங்காய்களை பறித்துச்செல்கின்றனர். தடுக்கச் சென்றால் அடித்து விரட்டுகிறார்கள். இது தொடர்பாக தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தால், புகார்கள் எதுவும் வாங்கவில்லை.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தில் உதவிப்பொறியாளராகப் பணியாற்றும் கனிராஜா என்ற தனசேகர் என்பவர் உதவியுடன் புகார் கொடுக்கச் செல்லும் எங்களை காவல் துறையை வைத்தே மிரட்டுகிறார்கள். தானமாகக் கொடுக்கப்பட்ட நில பத்திரத்தை ரத்து செய்துவிட்டு, சம பங்காகப் பிரித்துக்கொடுக்க வேண்டும் என கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். இதற்கு, பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகமும் உடந்தை. சொத்தை அவர்களிடமே கொடுத்துவிடு இல்லையென்றால் உன் மகன்மீது குண்டாஸ் போட்டுவிடுவேன். எஸ்பி-யிடம் பேசி குண்டாஸ் போடாமல் விடமாட்டேன். என மிரட்டினார். நிலப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, காவல்துறை அதில் தலையிடுவது எப்படி நியாயமாக இருக்க முடியும்? அதனால்தான், கலெக்டர் மற்றும் எஸ்பி’யிடம் புகார் கொடுக்க வந்தோம்!” என்றனர்.

இது தொடர்பாக பெரியகுளம் டிஎஸ்பி ஆறுமுகத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, “அவர்கள் குடும்பப் பிரச்னையில் நான் ஏன் தலையிடப்போகிறேன். அவர்களை நான் மிரட்டவில்லை” என்று பதில் கொடுத்தார் கூலாக. ”மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் புகார் மனு தொடர்பாகத் தகவல் தெரிவித்து விசாரணை நடத்தச் சொல்கிறேன்” என கலெக்டர் உறுதியளித்ததாக பெருமாள் மற்றும் அவரது மகன் முருகன் தெரிவித்தனர்.