வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (01/01/2019)

கடைசி தொடர்பு:08:40 (01/01/2019)

கடலூர் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை - 340 பேர் கைது!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே என திரிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி என திரிமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க உட்பட அனைத்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பொது மக்கள் எதிர்ப்பையும் மீறிப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணல் குவாரி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 26ம் தேதி திமுக தலைமையில் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து கடந்த இரண்டு நாட்கள் முன்பு பண்ருட்டியில் திமுக தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வலியுருத்தி 31ம் தேதி மணல் குவாரியை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மணல் குவாரி

அதன்படி திங்கள் கிழமை காலை கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ தலைமையில் என திரிமங்கலம் கிராமத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சேகர், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் ம.தி.மு.க, பா.ஜ.க உட்பட கட்சியினர் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர். பின்னர் அனைவரும் கூட்டமாக குவாரியை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தச் சென்றனர். அப்பொழுது குவாரி அருகே தடுப்புக் கட்டைகளை அமைத்து நூற்றிக்கும் மேற்பட்ட போலீசார் அவர்களைத் தடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்ப்பட்டது. அப்பொழுது ஏ.டி.எஸ்.பி வேதரத்தினம் மற்றும் சிதம்பரம் டி.எஸ்.பி பாண்டியன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்கள் மீது லட்டியால் தாக்கினார்கள், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குவாரி எதிரே இருந்த மரத்தடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்படடனர். போராட்டக்காரர்களுடன் சார் ஆட்சியர் வெற்றிவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பொழுது போராட்டக்காரர்கள் பொங்கல் பண்டிகை வரையில் தற்காலிகமாக குவாரியை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு தரப்பில் குவாரியை நிறுத்த வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 110 பெண்கள் உட்பட 340 பேர் கைது செய்யப்பட்டனர்.