வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (01/01/2019)

கடைசி தொடர்பு:09:00 (01/01/2019)

‘தாலிக்குத் தங்கம் வழங்க லஞ்சம்!’ -வேலூர் கலெக்டர் ஆபீஸில் சிக்கிய அதிகாரிகள்

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் வாங்கியதாக வந்த தகவலையடுத்து, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாகச் சோதனை நடத்தினர். ரூ.76,500 பணம் சிக்கியதால் சமூக நல அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை

வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 2018-19ம் நிதியாண்டில் மூன்றாயிரம் பெண்களுக்கு, ரூ.17 கோடியே 59 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் முதற்கட்டமாக வழங்கப்படுகிறது. இதன் தொடக்க விழா, கடந்த 22-ம் தேதி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாதனூர், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஆலங்காயம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த 702 பெண் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவியை, அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் நிலோஃபர் கபில் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, மீதமுள்ள பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தாலிக்குத் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்க தலா ஒரு பயனாளியிடம் 500 முதல் 1000 ரூபாய் வரை லஞ்சம் கேட்கப்படுவதாக புகார் எழுந்தது. இன்று ஒருநாள் மட்டும் 690 பெண் பயனாளிகளை, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்திற்கு வரவழைத்து லஞ்சம் பெறப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசியமாகப் புகார் சென்றது.

இதையடுத்து, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சரவணக்குமார் (வேலூர் பொறுப்பு) தலைமையில் உட்பட மொத்தம் 11 பேர் கொண்ட போலீஸார், வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று மாலை வந்தனர். சமூக நல அலுவலகத்திற்குள் திடீரென சென்று அறையை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு சோதனையைத் தொடங்கினர். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத சமூக நல அலுவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

லஞ்சம்

இன்றிரவு 9 மணி வரை நடைபெற்ற சோதனையில் பீரோவுக்கு அடியில், சுவாமி படங்களுக்கு பின்னால், டாய்லெட், டஸ்பின், டிபெஃன் பாக்ஸ் என பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 76 ஆயிரத்து 500 ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைப்பற்றினர். இந்த பணம் கணக்கில் வராதவை என்று தெரியவந்தது. அலுவலகத்தில் இருந்த பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, அக்கவுண்டன்ட் உட்பட மொத்தம் மூன்று அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், சமூக நலத்துறையில் உள்ள விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஊர்நல அலுவலர்கள் மூலம், லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.