`ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டும் சாதனை படைப்போம்' - அமைச்சர் விஜயபாஸ்கர் | Jallikattu will be held in Pudukkottai this year says Minister Vijayabaskar

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:15:04 (01/01/2019)

`ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டும் சாதனை படைப்போம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த ஆண்டு அதிக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்திச் சாதனை படைத்ததுபோல, இந்த  ஆண்டும்  அதிக அளவிலான  ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பட்ட மரத்தான் கோயில் விழாவை முன்னிட்டு, ஜனவரி 20-ம் தேதி மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, புதுக்கோட்டையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் சிறப்புரையாற்றினார் . மேலும், புதுக்கோட்டை வண்டிப்பேட்டையில், தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டத்தைத்  தொடங்கிவைத்தார்.

முன்னதாக அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழகத்தில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தகுந்த பாதுகாப்போடு நடைபெறும். சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகள் சார்பாகவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விராலிமலை  பட்ட மரத்தான் கோயில் ஜல்லிக்கட்டுப் போட்டியில், கடந்த ஆண்டைப்போல  1800 காளைகள் பங்கேற்கும். கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு  சாதனை படைத்ததுபோல, இந்த  ஆண்டும்  அதிக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.  உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ளது.  அதன் பிறகு, தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும். உலக முதலீட்டாளர் மாநாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.250 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ. 282  கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

ரூ.1,500 கோடி ரூபாய் மதிப்பில் புரோட்டான் தெரப்பி என்று அழைக்கப்படும் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்  அப்போலோ நிறுவனத்தால் ஜனவரி மாதம் 23-ம் தேதி திறக்கப்பட உள்ளது"  என்றார். ஜெயலலிதா இறப்புச் சம்பவம்குறித்து விசாரணை  நடைபெற்றுவரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர்குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு  அமைச்சரிடம் கருத்து கேட்டபோது, பதில் கூற மறுத்த அமைச்சர் செய்தியாளர்கள் கூட்டத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வேகமாக நடையைக் கட்டினார். இதனால், சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது.