வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:12:22 (01/01/2019)

‘புத்தாண்டு கொண்டாட்டத்தில் அத்துமீறிய இளைஞர்கள்’ - சாவியைப் பறித்து கேக் கொடுத்த கோவை போலீஸ்

 

புத்தாண்டு கொண்டாட்டம் கோவையிலும் களைகட்டியது. கோவை - அவிநாசி சாலையில் இருபுறமும் வாகனங்களில் சென்ற இளைஞர்கள் ஹேப்பி நியூ இயர் என கத்தியபடியும், கை கொடுத்தும் வாழ்த்துகளைப் பறிமாறிக்கொண்டனர். இதனிடையே குடிபோதையில் வாகனம் ஒட்டுதல், அதிவேகமாக வாகனம் ஒட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு, காவல் துறையினர் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பிவைத்தனர். இதற்காக கோவை மாநகரில் 22 இடங்களில் காவல்துறை சார்பில் முகாம் அமைத்திருந்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில், சாலைகளில் அத்துமீறிய ஏராளமான இளைஞர்களின் பைக் சாவியை காவல்துறையினர் பறித்தனர். எளிதாக திரும்பப் பெறும் வகையில் சாவியைப் பிடிங்கியதும், காவலர்கள் இளைஞர்களுக்கு டோக்கன் வழங்கினர்.

அப்போது, அங்கு வந்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் இளைஞர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி, புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். கேக் வெட்டும்போது சாவியைப் பறிகொடுத்த இளைஞர்கள், "சாவி... சாவி..." என்று கத்தினர். சாவி கேட்ட இளைஞர்களுக்கு, காவலர்கள் கேக்குகளை வழங்கினர். காவல் ஆணையாளர் சென்றதும் சாவிகளை வைத்திருந்த பெண் காவலர் சாவியை கொடுப்பதற்கான அனுமதி பெற, உதவி ஆணையாளர் சுந்தர்ராஜிடம் சென்றார். அவரைப் பின்தொடர்ந்த இளைஞர்கள், சாவியைக் கொடுக்குமாறு நச்சரித்தனர். இதையடுத்து, உதவி ஆணையாளர் சுந்தர்ராஜன் சாவிகளை இளைஞர்களுக்குக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, கோவை - அவிநாசி சாலையில் அத்துமீறிய இளைஞர்கள்மீது காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர்.