வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (01/01/2019)

கடைசி தொடர்பு:08:15 (02/01/2019)

இன்று முதல் அமல்... எந்தெந்த பிளாஸ்டிக்குகளுக்குத் தடை... இனி என்ன செய்யலாம்?!

பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்றாக காகிதப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதச்சுருள், தாமரை இலைத்தட்டு, வாழையிலை, மரப்பொருள்கள், துணிப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று முதல் அமல்... எந்தெந்த பிளாஸ்டிக்குகளுக்குத் தடை... இனி என்ன செய்யலாம்?!

ந்தப் புத்தாண்டில் நம்மை வாழவைக்கும் இயற்கைக்கு நாம் செய்யும் கைமாறாக, தமிழகத்தில் பிளாஸ்டிக்குகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம். பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்த அரசாணை 2018, ஜூன் 26-ல் வெளியிடப்பட்டது. இதன்படி, பிளாஸ்டிக் பொருள்களில் குறிப்பிட்ட சில வகைகள் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளன. 

பிளாஸ்டிக் தடை

இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கான விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும், பிளாஸ்டிக் பயன்பாடுகளைக் கண்காணித்துத் தடுக்கவும் மண்டல ஒருங்கிணைப்பாளர்களாக பி.அமுதா ஐ.ஏ.எஸ், டாக்டர்.சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ், ராஜேந்திர ரத்னூ ஐ.ஏ.எஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக காகிதப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதச்சுருள், தாமரை இலைத்தட்டு, வாழையிலை, மரப்பொருள்கள், துணிப்பைகள் போன்றவற்றைப் பயன்படுத்தும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, தமிழக அரசின் சார்பில் ‘www.plasticpollutionfreetn.org’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக்குக்கு மாற்றான பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களும், சில்லறை விற்பனையாளர்களும் அவர்களிடம் பொருள்களைப் பெற்று விற்பனைக்கும், தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக்

எந்தெந்தப் பொருள்களை அரசு தடைசெய்துள்ளது என்பதில் பொதுமக்களிடையே பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. அவர்களின் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக அந்த விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

உணவுப்பொருட்களை பேக்கிங் செய்யப் பயன்படுத்தப்படும் பேக்கிங் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள் ஆகியவற்றை உணவகங்களில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது.

தண்ணீர் பாக்கெட்டுகளுக்கான பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் கேரிபேக்குகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

உட்புறம் பிளாஸ்டிக் பூச்சுள்ள காகிதக் கப்புகள், பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்புகள் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.

டீக்கடைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரா, பிளாஸ்டிக் பைகள் போன்றவை தடைசெய்யப்ப்பட்டுள்ளன.

கட்சிகள் தோரணம் கட்டப்பயன்படுத்தும் பிளாஸ்டிக் கொடிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.

இவைதவிர, தடைசெய்யப்படாத பிளாஸ்டிக் பயன்பாட்டுப் பொருள்களின் விவரமும் தரப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்காக பிரத்யேகமாகத் தயாரித்து பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், தோட்டக்கலைத்துறை மற்றும் வனத்துறையினரால் பயிர் நாற்றாங்காலுக்குப் பயன்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள், பால் தயாரிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் பால் பாக்கெட்டுகளுக்கான பிளாஸ்டிக் பைகள், தயிர், எண்ணெய், மருந்துப்பொருள்களுக்கான பிளாஸ்டிக் உறைகள், உற்பத்திச்சாலைகளில் பயன்பாட்டில் இருக்கும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள், இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றின் பயன்பாட்டுக்குத் தடை கிடையாது. 

பிளாஸ்டிக்

பிளாஸ்டிக்கை தடைசெய்யும் உத்தரவென்பது காலத்தின் கட்டாயமாகவே கருத வேண்டும். ஒருகாலத்தில் குப்பைகளை சாணமும், வைக்கோலும், காய்கறிக்கழிவுகளும் ஆக்கிரமித்திருந்த காலம் மாறி, முழுவதும் கேரிபேக்குகளும் யூஸ் அண்ட் த்ரோ கப்புகளுமாக குப்பையில் நிரம்பியுள்ளன. கழிவுநீர்க் கால்வாய்கள் அனைத்தும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபடும் அளவுக்கு பிளாஸ்டிக்குகளால் சுற்றுப்புறங்கள் நிறைந்துவிட்டன. இந்த மக்காத பிளாஸ்டிக்குகள், இயற்கைக்கு மட்டுமின்றி, கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. கால்நடைகள் இந்த பிளாஸ்டிக்குகளை உட்கொண்டு உயிரிழக்கின்றன. 

அமெரிக்க ஆய்வறிக்கையின்படி உலகிலுள்ள மக்களால் ஆண்டுக்கு 500 பில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருள்களில் 70% பொருள்கள் கழிவுகளாக்கப்படுகின்றன. இந்தியாவில் ஆண்டுக்கு 5.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 15,342 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. 

பிளாஸ்டிக்

இந்த பிளாஸ்டிக்குகள் நிலத்தை மட்டும் ஆக்கிரமிக்கவில்லை. உலகம் முழுவதுமுள்ள கடற்பரப்புகளில் 5.25 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் மிதந்துகொண்டிருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக இந்தியக் கடற்பரப்பில் மட்டும் 1.3 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பொருள்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. இவற்றால் கடலில் வாழும் மீன்கள் உள்ளிட்ட உயிரினங்கள் செத்துமடிகின்றன.

எனவே, பிளாஸ்டிக் தடைக்கு அரசு மட்டுமே முயற்சியெடுத்தால் வெற்றிகரமாக செயல்படுத்த முடியாது. ஹெல்மெட் கட்டாயத்தைப்போல அரசாங்கம் தீவிரமாகக் கண்காணித்தால் மட்டுமே செயல்படுத்துவோம் என்றில்லாமல் நாமே அதற்கு நம்மை தயார்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, துணிப்பைகள், காகிதத்தட்டுகள், காகிதப்பைகள், தூக்குச்சட்டிகள், சில்வர் கப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். இடையில் வந்த கெட்ட பழக்கம் இடையிலேயே போவதுபோல, இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டிலிருந்து பொதுமக்கள் நாமே விழிப்பு உணர்வுடன் விலக வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்