`ஜல்லிக்கட்டு வருது; கூடுதல் ஆம்புலன்ஸ் வேணும்!’ - 108 தொழிலாளர்கள் கோரிக்கை! | People requesting for additional 108 ambulance

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:15:30 (01/01/2019)

`ஜல்லிக்கட்டு வருது; கூடுதல் ஆம்புலன்ஸ் வேணும்!’ - 108 தொழிலாளர்கள் கோரிக்கை!

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், கூடுதல் ஆம்புலன்ஸ், பயணப்படியை உயர்த்தித் தரவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்திருக்கிறார்கள்.

108 ஆம்புலன்ஸ்

தமிழ்நாடு 108 அவசர ஊர்தித் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பயணப்படி, உணவுப்படி வழங்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஸ்ட்ரெக்சர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 லட்சம் கி.மீட்டருக்கு மேல் ஓடியுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களைத் திரும்பப் பெற்று, புதிய வாகனம் வழங்க வேண்டும். முற்றிலும் அரசுப் பணத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில், குறைவான 108 ஆம்புலன்ஸ் வாகனங்களே உள்ளதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் பாதிப்படைகின்றனர். எனவே, கல்லல், திருவேகம்பத்தூர், திருப்பாச்சேத்திக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும். காரைக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து அதிகமான நோயாளிகள் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதால், இங்கு கூடுதலாக ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனம் வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க