`8 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க பேசுங்கள்' - எம்.எல்.ஏ-க்களுக்கு வணிகர் கூட்டமைப்பு கடிதம் | Merchant Association wrote letters to cm to protect the fire works factory

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (01/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (01/01/2019)

`8 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க பேசுங்கள்' - எம்.எல்.ஏ-க்களுக்கு வணிகர் கூட்டமைப்பு கடிதம்

விருதுநகர் மாவட்டத்தில்,  ஒரு மாதத்திற்கும் மேல் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க, சட்டசபையில் கேள்வி எழுப்பக் கோரி தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் முதல் அமைச்சர் மற்றும் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

பட்டாசு ஆலை

விருதுநகர் மாவட்டத்தில், சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 1070 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள், இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் பேரியம் போன்ற வேதிப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு

இந்த வேதிப் பொருள்கள் இல்லாமல் பட்டாசுகளைத் தயாரிக்க முடியாது என்று கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்த சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்துவருகின்றனர். பட்டாசு ஆலைகளைத் திறக்கக் கோரியும் வாழ்வாதாரத்தைக் காக்க வலியுறுத்தியும், பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

பட்டாசு

இந்த நிலையில், பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில், அதன் மாநில பொதுச்செயலர் இளங்கோவன், முதல்வர், துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி சட்டசபைக் கூட்டம் நடைபெறும்போது, பட்டாசுப் பிரச்னைகுறித்து கேள்வி எழுப்பி, இந்தப் பிரச்னைக்குத் தீர்வும், 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் சட்டசபையில் பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.