வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:18:30 (01/01/2019)

‘மனநலம் பாதித்த சிறுமியிடம் அத்துமீறல்! - போலீஸில் பிடிபட்ட வேலூர் பெயின்டர்

வேலூரில், மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைகொடுத்த பெயின்டரைப் பிடித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

 பாலியல் தொல்லை -பெயிண்டர்

வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகை பீடி குவாட்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர், அகமது பாஷாவின் மகன் ஷாஜகான் (37), பெயின்டர். இவருக்கு, மனைவி மற்றும் 16 வயதில் மகள் உள்ளனர். மனைவி, மகளைப் பிரிந்து ஷாஜகான் பல ஆண்டுகளாகத் தனியாக வசித்துவருகிறார். நேற்றிரவு குடிபோதையில் இருந்த ஷாஜகான், அந்தப் பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியை வாயைப் பொத்தி கழிவறைப் பகுதிக்கு தூக்கிச்சென்றிருக்கிறார்.

அங்கு வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர், வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்குப்பதிவுசெய்து, இன்று காலை பெயின்டர் ஷாஜகானைப் பிடித்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். 2018-ம் ஆண்டில், வேலூர் மாவட்டத்தில் மொத்தம் ஏழு பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் 96 போக்ஸோ வழக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.