வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:12:00 (05/01/2019)

இந்த ஆண்டின் இரண்டாம் ஜல்லிக்கட்டு எங்க ஊரில்தான்! - புதுக்கோட்டை மக்கள் பெருமிதம்

2019-ம் ஆண்டின் இரண்டாம் ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே, தச்சன்குறிச்சியில் ஜனவரி 2-ம் தேதி கோலாகலமாகத்  தொடங்குகிறது. இதற்காக, 850 காளைகளுக்கும், 450 மாடுபிடி வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சன்குறிச்சி கிராமத்தில், புனித அடைக்கல மாதா ஆலயத்தின் புத்தாண்டு திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் ஜனவரி 1-ம் தேதி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.  தமிழகத்தின் இரண்டாம்  ஜல்லிக்கட்டுப் போட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்றத் தடை காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு, சில கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி, இங்கு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதேபோல, இந்த ஆண்டும் ஜன 2-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக, வாடிவாசல், பார்வையாளர்கள் கேலரிஆகியவை சீரமைக்கும் பணி கடந்த ஒருவாரமாக முழுவீச்சில் நடந்துள்ளது.

 

போட்டியில், மாட்டுக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் எவ்வித பரிசுகளும் கொடுக்காத பட்சத்திலும், 850 காளைகளை, காளையின் உரிமையாளர்கள் இறக்குகின்றனர். சுமார் 450 மாடு பிடி வீரர்கள் மாடுகளைப் பிடிக்க தயார் நிலையில் உள்ளனர். கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. தொன்போஸ்கோ ஜல்லிக்கட்டு பேரவையைச் சேர்ந்த ஜான் மரிய வியான்னியிடம் பேசினோம், " தலைமுறை, தலைமுறையாக இங்கு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திவருகிறோம். கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 150 குடும்பங்கள் சேர்ந்து, குடும்பத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து நிதி திரட்டி, இந்தப் போட்டியை நடத்துகிறோம். அடைக்கல மாதா ஆலய ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்டால், அந்தக் காளை, மற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் நிச்சயம் பெயர் வாங்கும் என்பது மாட்டின் உரிமையாளர்களின் நம்பிக்கை.

ஜல்லிக்கட்டு

அதனால்தான், பரிசு ஏதும் இல்லையென்றாலும், பல மைல் தூரம் பயணம்செய்து காளையுடன் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.

இது, இன்றளவும் தொடர்கிறது. ஆரம்பத்தில், தச்சன்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதி காளைகள்தான் போட்டியில் கலந்துகொண்டு வந்தது. தற்போது, தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் காளைகள் மற்றும் காளையர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டி, அனைத்துப் போட்டிகளில் இருந்தும் மாறுபட்டது. குறிப்பாக, காளைகளுக்கும் காளையர்களுக்கும் பரிசு கிடையாது. உள்ளூர் காளைகள் மற்றும் உள்ளூர் காளையர்கள் போட்டியில் பங்கேற்கக் கூடாது. வாடிவாசலை ஒட்டி ஓரங்களில் அனைத்துப் பகுதிகளும் அடைக்கப்பட்டிருக்கும் என ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கட்டுப்பாடுகள் பல இருந்தாலும், ஆர்வமுடன் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இரண்டாவது ஜல்லிக்கட்டுப் போட்டியே எங்கள் ஊரில் நடைபெறுவதால், எங்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையைக்கூட பெரிய அளவில் கொண்டாட மாட்டோம். ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டியை கிராமமே சேர்ந்து கொண்டாடுவோம்" என்றார்.