வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (01/01/2019)

கடைசி தொடர்பு:20:00 (01/01/2019)

`மனு ஸ்மிரிதியை மீண்டும் கொண்டுவருவதற்காகப் போராட்டம்' - பிருந்தா காரத் காட்டம்!

'மனு ஸ்மிரிதியை மீண்டும் கொண்டுவருவதற்காக அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். கோர்ட் உத்தரவுப்படி கேரள அரசு செயல்படுகிறது' என வனிதா மதில் நிகழ்ச்சியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசினார்.

காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை வனிதா மதில் என்ற பெண்கள் சுவர் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது. 620 கி.மீ தூரம் நடந்த இந்த நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பெண்கள் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் கைகோத்து அணிவகுத்து நின்றனர். அதன்பிறகு, திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், பிருந்தா காரத் உள்ளிட்டோர் பேசினர். பிருந்தாகாரத் பேசுகையில், "சரித்திரகரமான கேரளத்தில் ஆண் பெண் சமத்துவத்திற்காக மன்னத்து பத்மநாபன், ஐயங்காளி ஆகியோர் போராட்டம் நடத்தினர். மறுமலர்ச்சி நாயகர்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக இந்தப் போராட்டம் நடக்கிறது.

சுவாமி விவேகானந்தர் கேரளத்திற்கு வரும்போது, ஜாதி பாகுபாடுகுறித்து கடுமையாகச் சாடினார். இன்று இந்தியா புகழும் அளவிற்கு கேரளா உயர்ந்துள்ளது. ஐயங்காளியை கல்லால் அடித்தவர்கள், நாராயணகுரு, மன்னத்து பத்மநாபன் ஆகியோரைத் தாக்கியவர்கள், இன்று அவர்களுடைய சித்தாந்தங்களைப் பேசுகிறார்கள். மனு ஸ்மிரிதியை மீண்டும் கொண்டுவருவதற்காக அவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். கோர்ட் உத்தரவுப்படி கேரள அரசு செயல்படுகிறது. பினராயி விஜயன் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை வரவேற்கிறோம். பெண்கள் எந்தக் கோயிலுக்கும் போகலாம். ஐயப்பனை யார் வேண்டுமானாலும் வணங்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தை நடப்பாக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க-வின் பின்னணியை இன்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

மோகன்பகவத் போன்ற பெண்களுக்கு எதிரானவரின் பின்னாலா நீங்கள் செல்கிறீர்கள். மதத்தின் பெயரில் இங்கு பிரிவினை நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை அரசியலாக மாற்ற நினைக்கவில்லை. காங்கிரஸ் பக்தர்களுடன் நாங்கள் இருக்கிறோம் என இந்தப் பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். இது, வாக்கு வாங்குவதற்கான பிரச்னை அல்ல, பெண்களின் உரிமைப் பிரச்னை. பிற்போக்கு சக்திகளுக்கு எதிராகப்  பெண்கள் ஒற்றுமையாக, தோளோடு தோள் சேர்ந்து போராட்டம் நடத்துவார்கள்" என்றார்.