`விபத்துகளைக் குறைப்பதுதான் முதல் இலக்கு' - கடலூர் எஸ்.பி பேட்டி! | The first goal is to reduce the accident says Cuddalore S.P.Saravanan

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (01/01/2019)

கடைசி தொடர்பு:20:30 (01/01/2019)

`விபத்துகளைக் குறைப்பதுதான் முதல் இலக்கு' - கடலூர் எஸ்.பி பேட்டி!

'கடலூர் மாவட்டத்தில், குற்றங்களைக் குறைக்க சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன' என எஸ்.பி சரவணன் தெரிவித்துள்ளார். 

எஸ்.பி. சரவணன்

கடலூர் மாவட்ட எஸ்.பி சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கடலூர் மாவட்டத்தில், வாகன விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. கடந்த ஆண்டு 3,460 சாலை விபத்துகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 415 பேர் இறந்துள்ளனர். கை, கால்களை இழந்தவர்கள் ஏராளம். விபத்தில் சிக்கியவர்களின் குடும்பமே திசை மாறிவிடுகிறது. எனவே,விபத்துகளைக் குறைப்பதுதான் முதல் இலக்காகக் கொண்டுள்ளோம். எனவே, இந்த ஆண்டில் 30 சதவிகித விபத்துகளைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாவட்டத்தில், கடந்த ஆண்டில் 860 தற்கொலை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சாதாரண விஷயத்திற்கெல்லாம் தற்கொலைக்கு முயல்வது மிகவும் ஆபத்தானது. இதைத் தடுக்க சமூக நலத்துறையினருடன் சேர்ந்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்படும். குறிப்பாக சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி சப் டிவிஷனில் மட்டும் 182 தற்கொலை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 350 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றங்களைக் குறைக்க மாவட்டத்தில் பல இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுவருகிறது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வழக்குகள் தேங்குவதைத் தடுக்க 60 நாள்களுக்குள் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட திருட்டு வழக்குகளில், 65 சதவிகிதம் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த ஆண்டில் 52 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில்  இரண்டு, ஆதாயக் கொலைகள் ஆகும்" இவ்வாறு அவர் கூறினார்.