`18 ஆண்டுகளாகக் கஞ்சா விற்பனை' - ராமநாதபுரத்தில் 23வது தடவையாக கைது செய்யப்பட்ட ரவுடி! | man was arrested for allegedly selling kanja in Ramanathapuram

வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (01/01/2019)

கடைசி தொடர்பு:07:16 (02/01/2019)

`18 ஆண்டுகளாகக் கஞ்சா விற்பனை' - ராமநாதபுரத்தில் 23வது தடவையாக கைது செய்யப்பட்ட ரவுடி!

ராமநாதபுரத்தில் 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்தவரை 23வது தடவையாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா விற்ற சுரேஷ்

ராமநாதபுரம் ஓம் சக்தி நகர் 9-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். கடந்த 18 ஆண்டுகளாகக் கஞ்சா விற்பதைத் தொழிலாக கொண்டுள்ளார். 2000-ம் ஆண்டில் போலீஸாரிடம் சிக்கிய இவர் மீது 2009-ம் ஆண்டு வரை 4 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டது. 2007-ம் ஆண்டு போலீஸாரின் ரவுடிப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சுரேஷ் மீண்டும் கஞ்சா தொழிலில் ஈடுபட்டதால் 2010 -12  காலத்தில் மேலும் 10 வழக்குகளில் சிக்கினார். 

ஒவ்வொரு முறை கைதாகும்போதும் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கஞ்சா விற்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சுரேஷ், தனது கஞ்சா விற்பனை தொழிலை முழு நேரத் தொழிலாக மாற்றிக்கொண்டு நகரின் பல பகுதிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளார். மேலும், தனது வீட்டினுள் கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததுடன் அவற்றைப் பொட்டலமாக போட்டு விற்கும் இடமாகவும் மாற்றியுள்ளார். இந்த நிலையில், தனது வீட்டில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்த சுரேஷை ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய எஸ்.ஐ குகனேஸ்வரன் கைது செய்தார். அவரிடம் இருந்து ஒரு கிலோவுக்கும் மேலான கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்ததுடன், சுரேஷ் மீது 23 -வது முறையாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.