கடலூர் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது! | youngster arrest under pocso act in Cuddalore

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:07:35 (02/01/2019)

கடலூர் அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மெய்யாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உஷாராணி. இவரின் கணவர் இல்லாததால் தனது இரு மகள்களையும் தன் தயார் வீட்டில் விட்டுவிட்டு திருப்பூரில், தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரின் 16 வயதுடைய மூத்த மகள் சிதம்பரத்தில் உள்ள அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் தினம் பேருந்தில் பள்ளிக்குச் சென்றபோது விளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் (19) என்ற இளைஞரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராகுல்

இதைப் பயன்படுத்தி அந்த இளைஞர் உன்னைக் காதலிக்கிறேன், உன்னைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார், இதைச் சம்பந்தப்பட்ட வாலிபரிடம் கூறியபோது அவர் உன்னைக் கைவிட மாட்டேன் நிச்சயம் திருமணம் செய்துகொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த 30-ம் தேதி மாணவிக்கு வயிற்று வலி அதிகமாகியுள்ளதால், இது குறித்து பாட்டியிடம் கூறியுள்ளார். அவர் உடனே மாணவியை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்பொழுது ஆட்டோவிலேயே மாணவிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாயும், மகளும் குமராட்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இது குறித்து தகவலறிந்த மாணவியின் தாயார் இது குறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். உடனே போலீஸார் சம்பந்தப்பட்ட வாலிபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.