புதுக்கோட்டை அருகே விவசாயக் கடனில் ரூ.4.95 கோடி மோசடி - மேலாளர் மீது வழக்கு பதிவு! | bank manager involved in fraud in Pudukkottai

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (02/01/2019)

கடைசி தொடர்பு:07:48 (02/01/2019)

புதுக்கோட்டை அருகே விவசாயக் கடனில் ரூ.4.95 கோடி மோசடி - மேலாளர் மீது வழக்கு பதிவு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வங்கிக்கடனில் ரூ.4.95 கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

வங்கி

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில், கிரண் பாபு என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, வங்கியிலிருந்து கொண்டு, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து, வங்கியை அணுகும் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்கு கமிஷன் கேட்டதாகவும் இவர் மீது மேலும் புகார் எழுந்தது. இதையடுத்து, வங்கி நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். கிரண்பாபு மீது அடுக்கடுக்கான புகார்கள் வரவே கடந்த 2018 மே மாதம் மாதம் வங்கி நிர்வாகம் கிரண் பாவுவை பணி நீக்கம் செய்தது. தொடர்ந்து, வங்கி நிர்வாகம் நடத்திய ஆய்வில் 4.95 கோடியை கிரன்பாபு மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதற்காக, மனைவி நிஷபாவுக்கு அவசர, அவசரமாக வங்கிக்கணக்கு துவங்கி, மோசடிப் பணத்தை மனைவி வங்கிக் கணக்கில் பரிமாற்றம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, இதுகுறித்து வங்கி நிர்வாகம் சி.பி.ஐ-யிடம் புகார் அளித்தது. சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே திருச்சி பாரத ஸ்டேட் வங்கி நிர்வாக அலுவலகம் இதுகுறித்து பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ளது.

எஸ்பிஐ

அதில், ``கிரண் பாபு ஏரிகாலி, பாரத ஸ்டேட் வங்கி ஆலங்குடி கிளையில் கிளை மேலாளராக பணிபுரிந்தபோது (31.10.2015 முதல் 22.01.2018 வரை) வங்கிப் பணத்தை கையாடல் செய்த நடவடிக்கைகளால் 17.5.2018 முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வங்கியின் சார்பில் சி.பி.ஐ-யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வது என்னவென்றால், கிரண் பாபு ஏரிகாலி, மீது கிரிமினல் குற்றம் மட்டும் இல்லாமல் பெரிய தொகையை வங்கியில் இருந்து கையாடல் செய்த குற்றமும் சேர்ந்துள்ளது. கிரண் பாபு ஏரிகாலியிடம், வங்கிப் பரிவர்த்தனை சம்பந்தமாக யாரேனும் தொடர்பு வைத்துக்கொண்டால் அது அவர்களுடைய சொந்த பொறுப்பு. இப்படிக்கு துணைபொது மேலாளர்'' என பத்திரிகைளில் வங்கி நிர்வாகம் சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டிய வங்கிக்கடனில் வங்கி மேலாளரே மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.