வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (02/01/2019)

கடைசி தொடர்பு:07:50 (02/01/2019)

`புயல் வீசுமா, புதிய அறிவிப்புகள் வெளியாகுமா!’ - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

பரபரப்பான சூழலுக்கு மத்தியில், இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குகிறது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளார்.  இந்தக் கூட்டத்தொடரில், எதிர்க்கட்சியான தி.மு.க புயலாகச் செயல்படுமா ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.க பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுமா என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில், கஜா புயல் நிவாரணப் பணிகளில் சுணக்கம், மத்திய அரசு போதுமான நிதி வழங்காதது, ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை, மேக்கே தாட்டு அணை திட்டத்தை தயாரிக்க மத்திய அரசு கர்நாடகா அரசுக்கு அனுமதியளித்தது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீண்ட நாள்களாகச் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யாதது என ஏராளமான விவாதங்கள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

தமிழகச் சட்டப்பேரவை

சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாளில் ஆளுநரின் உரை இடம்பெறவுள்ளது. இதில் மாநில அரசின் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. நாளை (3.1.2019) பேரவைக் கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பேரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்படும். அதன்பிறகு, சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிடும் தேதியிலிருந்து ஆளுநரின் உரை மீது பேரவையில் விவாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.