ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - பொங்கல் பரிசு அறிவித்த ஆளுநர் | Governor begins his speech in Tamil with New Year greetings

வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (02/01/2019)

கடைசி தொடர்பு:11:44 (02/01/2019)

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வழங்கப்படும்! - பொங்கல் பரிசு அறிவித்த ஆளுநர்

தமிழக ஆளுநர்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது.  புத்தாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. அதன்படி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புராஹித் தமிழில் தனது உரையைத் தொடங்கினார். அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். எளிமையான வாழ்க்கை வாழுங்கள் அது ஊழலை ஒழிக்கும் இதுவே எனது புத்தாண்டு செய்தி என்றார்.

ஆளுநர் உரையில், திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் பொங்கலைக் கொண்டாட ஒரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட 1,000  ரூபாய் வழங்கப்படவுள்ளது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்'' என்றார்.

வெளிநடப்பு

இதற்கிடையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கஜா புயல் நிவாரணம், சாத்தூரில் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம், ஸ்டெர்லைட் உள்ளிட்டவை குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக தி.மு.க - காங்கிரஸ் கட்சியினர்
தெரிவித்தனர். 

மு.க.ஸ்டாலின்

வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், கஜா புயல் நிவாரணப் பணிக்கு மத்திய அரசிடம் இருந்து மாநில அரசால் போதிய நிதியைப் பெற முடியவில்லை. இந்த அரசு எல்லா நிலையிலும் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளது. தோல்வி அடைந்த அரசு எழுதித் தந்தவற்றை ஆளுநர் வாசிக்கிறார் எனக் காட்டமாகப் பேசினார்.

டிடிவி தினகரன்


எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் ஒரு புறம் ஆளுங்கட்சியினர் மட்டுமே அமர்ந்திருந்தனர். சுயேச்சை எம்.எல்.ஏவான டி.டி.வி தினகரன் எதிரில் தனியாக அமர்ந்திருந்தார்.