வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (02/01/2019)

கடைசி தொடர்பு:13:25 (02/01/2019)

`பக்தர்கள் தடுக்கவில்லை; ஐயப்பனை தரிசித்தோம்!' - சபரிமலை சென்ற பிந்து பேட்டி

சபரிமலையில் மலை ஏறும்போது பக்தர்கள் எங்களை அடையாளம் கண்டுகொண்டனர். ஆனாலும் அவர்கள் தடுத்து போராட்டம் நடத்தவில்லை என சபரிமலை ஐயபன் கோயிலில் தரிசனம் செய்த பிந்து தெரிவித்தார்.

பிந்து, கனகதுர்க்கா

சபரிமலைக்கு கடந்த டிசம்பர் 24-ம் தேதி சென்ற கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனக துர்கா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். பக்தர்கள் போராட்டத்தால் அவர்கள் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் இன்று அதிகாலை சபரிமலை சன்னிதானத்தில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதற்கு கேரள பா.ஜ.க. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதரன்பிள்ளை கூறுகையில், ``சபரிமலையில் பெண்களை அனுமதித்த முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும். இந்து அமைப்புகள் நடத்திய போராட்டம் சரியானது என மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர். மேலும், சமரசம் இல்லாத போராட்டம் தொடரும்" என்றார். அதேசமயம் பெண்கள் சந்நிதானத்துக்குச் சென்றதால் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. `நீதிமன்ற உத்தரவை அலட்சியம் செய்யும் செயல்' என சி.பி.எம். கேரள மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்த நிலையில், சபரிமலையில் எங்களை அடையாளம் கண்டுகொண்ட பக்தர்கள் தடுக்கவில்லை என பிந்து கூறியுள்ளார்.

சபரிமலை
 

சபரிமலை சந்நிதானம் சென்றது குறித்து பிந்து கூறுகையில், ``நிலக்கல் வந்தால் சபரிமலை செல்லலாம் என அரசு ஏற்கெனவே கூறியிருந்தது. இதையடுத்து நாங்கள் நிலக்கல் சென்று அங்கிருந்து பம்பை சென்றோம். பம்பையில் காவல்துறையின் பாதுகாப்பை நாடினோம். அதிகாலை 1.30 மணிக்கு பம்பையிலிருந்து சபரிமலைக்குப் புறப்பட்டோம். அதிகாலை 3.30 மணிக்கு ஐயப்பனை தரிசித்தோம். நாங்கள் மாறுவேடத்தில் செல்லவில்லை. பம்பையிலிருந்து சபரிமலைக்குச் செல்ல மலை ஏறும்போது பக்தர்கள் எங்களை அடையாளம் கண்டுகொண்டனர். ஆனாலும், அவர்கள் போராட்டம் நடத்தவில்லை, தடுக்கவில்லை. காவல்துறையினரும் நல்ல முறையில் பாதுகாப்பு கொடுத்தனர். 18-ம் படி வழியே செல்லாமல் வி.ஐ.பி. தரிசன வழியாக சென்று தரிசனம் செய்தோம்" என்றார்.