வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (02/01/2019)

கடைசி தொடர்பு:14:24 (02/01/2019)

மாயமாகி 6 மாதங்கள் ஆகிவிட்டன - சி.ஆர்.பி. எஃப் வீரர் மனைவி கண்ணீர்

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் மாயமாகி 6 மாத காலமாகியும் அவரை மீட்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

காத்திருப்பு போராட்டம்

நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர், அண்ணாதுரை. சி.ஆர்.பி.எஃப் வீரரான அவர் மகராஷ்ட்ராவில் பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு அவர் சண்டிகருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனால் 20 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். விடுமுறை முடிந்த பின்னர் கடந்த ஜூன் 29-ம் தேதி நெல்லையிலிருந்து திருக்குறள் விரைவு ரயில் மூலம் சண்டிகருக்குப் புறப்பட்டுச் சென்றார். 

இந்த நிலையில், ஜூலை 2-ம் தேதி அவரது வீட்டுக்கு டெல்லியில் இருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் தொலைபேசியில் பேசியுள்ளார். அண்ணாதுரையின் மனைவி தெய்வக்கனியிடம் பேசிய காவல்துறை அதிகாரி, ’உங்கள் கணவரின் பை மற்றும் அவரது பொருள்கள் காவல் நிலையத்தில் உள்ளன, உங்கள் கணவர் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

அதனால் பதற்றம் அடைந்த தெய்வக்கனி, கணவரை தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை. அதனால் டெல்லி மற்றும் சண்டிகர் நகரங்களில் உள்ள சி.ஆர்.பி.எஃப் அலுவலகங்களைத் தொடர்புகொண்டு தன் கணவர் பற்றி விசாரித்துள்ளார். ஆனால், உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, தன் கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு டெல்லி, சண்டிகர் அலுவலகங்களிலும் நெல்லை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தார். அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்ணாத்துரை

அண்ணாதுரை காணாமல் போய் 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவரை இதுவரை கண்டுபிடித்துக் கொடுக்காததால் தெய்வக்கனி தன் இரு குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்.

இது குறித்து பேசிய தெய்வக்கனி, ``என் கணவர் 6 மாதங்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். பல இடங்களில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, டெல்லிக்குச் சென்று 4 முறை நேரடியாக அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் அளித்தேன். ஆனால், இதுவரை என் கணவரின் நிலை பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அவர் காணாமல் போனது தொடர்பாக நான் புகார் அளித்ததும் அவரது சம்பளத்தையும் நிறுத்தி விட்டார்கள். அதனால் இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் சிரமப்படுகிறேன். என் குழந்தைகள் அப்பாவைத் தேடி அழும்போது ஆறுதல் சொல்லக் கூட முடியவில்லை. அதனால் விரைவாக என் கணவரை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கண்ணீரோடு தெரிவித்தார்.