`திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியா?' - ஆதரவாளர்கள் கேள்விக்கு அழகிரியின் பதில் | M.K.Azhagiri reaction for tiruvarur byelection

வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (02/01/2019)

கடைசி தொடர்பு:14:27 (02/01/2019)

`திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியா?' - ஆதரவாளர்கள் கேள்விக்கு அழகிரியின் பதில்

`திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அண்ணன் போட்டியிடுவார். அதன் ஒருகட்டமாகத்தான் திருவாரூருக்கும் அவர் சென்றுவந்தார்' எனப் பேசி வந்தனர் அழகிரி தரப்பினர்.

`திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியா?' - ஆதரவாளர்கள் கேள்விக்கு அழகிரியின் பதில்

ருணாநிதி மறைவுக்குப் பிறகு திருவாரூரில் உள்ள அவரின் பாட்டி அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்துக்குச் சென்று வந்தார் மு.க.அழகிரி. அப்போதே சில சமுதாயத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனையும் நடத்தினார். `உதயசூரியன் சின்னத்தைவிடவும் கருணாநிதியின் சொந்த செல்வாக்கு திருவாரூரில் அதிகம். இந்தத் தேர்தலில் அழகிரி போட்டியிட வேண்டும்' என விருப்பம் தெரிவித்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். 

அழகிரி

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு கட்சிக்குள் மீண்டும் அழகிரி சேர்க்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அவர் சென்னை, மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு செப்.5-ம் தேதி அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினார். இதன்பின்னர், திண்டுக்கல் உட்பட சில பகுதிகளில் கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார். கடந்த சில மாதங்களாக குடும்ப உறுப்பினர்கள் யாரும் சரிவர பேசாமல் இருப்பதால், அவரும் நடப்பவற்றை அமைதியாகக் கவனித்து வருகிறார். `திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நிச்சயம் அண்ணன் போட்டியிடுவார். அதன் ஒருகட்டமாகத்தான் திருவாரூருக்கும் அவர் சென்றுவந்தார்' எனப் பேசி வந்தனர் அழகிரி தரப்பினர். இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், அழகிரியின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் அவரிடம் பேசியுள்ளனர் ஆதரவாளர்கள் சிலர். இதற்குப் பதில் அளித்த அழகிரி, `நான் சொல்லும் வரையில் எதுவும் பேச வேண்டாம். அமைதியாக இருங்கள்' எனக் கூறிவிட்டார். 

அழகிரி

அதேசமயம், திருவாரூர் தொகுதியில் வெற்றிக்கான சூழல்கள் குறித்து அழகிரியின் கவனத்துக்குச் சில விஷயங்களைக் கொண்டு சென்றுள்ளனர் அரசியல் ஆலோசகர்கள் சிலர். அப்போது பேசியவர்கள், `1962-ம் ஆண்டு தஞ்சாவூரில் கருணாநிதி வெற்றி பெற்றபோது, தி.மு.க-வுக்குத் திருவாரூரில் 4-வது இடம்தான் கிடைத்தது. அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு முதலிடமும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டாவது இடமும் ராஜாஜியின் சுதந்திரா கட்சிக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் உதய சூரியன் சின்னத்துக்கு மதிப்பு குறைவாகத்தான் இருந்தது. இன்று அதே தி.மு.க செல்வாக்குடன் வளர்ந்திருப்பதற்குக் காரணம், கட்சி அல்ல. கருணாநிதி மேற்கொண்ட தனிப்பட்ட முயற்சிகள்தாம்.

அழகிரி

2011, 2016-ம் ஆண்டில் தி.மு.க தோற்கும்போதும், திருவாரூர் தொகுதியில் மூன்றில் இரண்டு மடங்கு வாக்குகளை எடுத்து வெற்றி பெற்றார் கருணாநிதி. இந்த வாக்குகள் அனைத்தும் கருணாநிதியின் மகனான நீங்கள் போட்டியிட்டால், உங்களுக்கு வந்து சேரும். திருவாரூர் தொகுதியில் இருக்கும் கருணாநிதியின் விசுவாசிகள் உங்களை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம். திருவாரூரில் அ.தி.மு.க-வுக்குத் தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் இல்லை. நீங்கள் நேரடியாகப் போட்டியிட்டால், தி.மு.க--வுக்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்' என விவரித்துள்ளனர். இதற்கும் அழகிரி தரப்பிலிருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. 

அழகிரி

தொகுதிக்குள் கருணாநிதிக்கான தனிப்பட்ட செல்வாக்கை அறிந்துதான், ஸ்டாலினைப் போட்டியிட வைக்கும் வேலையில் சில நிர்வாகிகள் ஈடுபட்டனர். `மீண்டும் ஒரு தேர்தல் வருவதற்கு தாம் விரும்பவில்லை' எனக் கூறி, அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் ஸ்டாலின். இதே தொகுதியில் இரண்டு முறை பிரசாரம் செய்தவர் கருணாநிதியின் மகள் செல்வி. ``கருணாநிதி இறந்த சமயத்தில், திருவாரூரில் போட்டியிட சீட் கேட்பார் செல்வி என்ற பேச்சு அறிவாலயத்தில் எழுந்தது. தேர்தல் தேதி தள்ளிப் போனதால் இந்தப் பேச்சும் அப்படியே அமுங்கிப் போய்விட்டது. தற்போது வேட்பாளர் தேர்வில் இருக்கும் ஸ்டாலினும், `குடும்ப ஆள்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது' என்ற முடிவில் இருக்கிறார். அழகிரியின் வியூகத்தை எல்லாம் அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. திருவாரூர் தொகுதியில் பூண்டி கலைவாணன் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. மற்ற கட்சிகள் நிறுத்தப் போகும் வேட்பாளர்களைப் பொறுத்து ஸ்டாலின் முடிவில் மாற்றம் ஏற்படலாம்" என்கின்றனர் தி.மு.க நிர்வாகிகள்.