வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (02/01/2019)

கடைசி தொடர்பு:15:55 (02/01/2019)

``ஆளுநர் உரையில் மக்கள் கஷ்டங்களுக்குத் தீர்வு இல்லை” - சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் செளந்திரராஜன்

தமிழ்நாடு சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் செளந்திரராஜன் சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள  சுமைத்தூக்கும் தொழிலாளர்களைச் சந்தித்து, வரும் ஜனவரி 8, 9 தேதிகளில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து விவாதித்தார். 

ஆளுநர் பற்றி பேசிய செளந்திரராஜன்

அதன் பின்னர், நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய செளந்திரராஜன், ``தேர்தலில் மக்களைச் சந்திக்க முடியாத அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு இருப்பதால் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது. மாநில அரசு மத்திய அரசுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட அசைக்கத் தயாராக இல்லை. அது மாநில மக்களைப் பெரிதும் பாதிக்கிறது. மத்திய அரசுக்குத் தொடர்ந்து அடிமை அரசாங்கமாக அ.தி.மு.க அரசு உள்ளது. எனவே, மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு ஆட்சேபனைகூட தெரிவிக்க முடியாத அரசாங்கமாக இருக்கிறது.

ஆளுநர் உரையில் எந்த ஒரு புதிய தகவலும் இல்லை. பொங்கல் பொருள் கொடுப்பது புதியதல்ல. எதிலும் மாற்றமில்லை. கிராமப்புறத்தில் விவசாயிகள் விளைபொருள்களுக்கு உரிய விலை இல்லையென்று போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் 3,000 பேர் தற்கொலை செய்து இறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் உருப்படியான நடவடிக்கை இல்லை.

செளந்திரராஜன்

கஜா புயல் விஷயத்தில் மத்திய, மாநில ரெண்டு அரசுகளும் என்ன செய்திருக்க வேண்டுமோ அதில் 10-ல் ஒரு பங்குகூடச் செய்யவில்லை. மத்திய அரசு கஜா புயல் நிவாரண நிதியாகக் 1,146 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். நாம் கேட்டது 15,000 கோடி, மாநில அரசு என்ன செய்யப்போகிறது. மோடிக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லுகிறார்கள். எங்க பணம் எங்கேன்னு கேட்கத் தயாராக இல்லை.

மக்கள் சம்பந்தப்பட்ட, மக்கள் அனுபவிக்கிற அடிப்படை கஷ்டத்துக்கும் எந்தத் தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை. பழைய கல், பழைய மொந்தை. ஜெயலலிதா மரணம் என்பது அனைவருக்கும் தெரியும். குற்றம் சொல்லிக்கொண்டு ஒருவருக்கொருவர் உட்கட்சி அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆளும் தரப்பும் சசிகலா தரப்பும்  இரண்டு பேரும் ஜெயலலிதாவுக்குச் செய்கிற அநீதி. இது தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் உதவப்போவதில்லை. அ.தி.மு.க, ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த அரசாங்கமாகவே இல்லை. கூட்டுத் தலைமையும் இல்லை.

சபரிமலை விஷயம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சபரிமலைக்கு வருகின்ற பெண்களை தடுக்கிற உரிமை மாநில அரசுக்கு கிடையாது. அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மாநில அரசு பொறுப்பு இருக்கு. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அந்த சந்நிதானமும் தேவஸ்தானமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை அரசியல் ஆக்கக் கூடாது'' என்றார்.